தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தேசியத் தினக் கொண்டாட்டத்தில் மக்களின் உற்சாகம் கரைபுரண்டது.

அகமகிழ்ச்சி நிறைந்த 60வது தேசிய தினக் கொண்டாட்டம்

6 mins read
3a3bbf55-cab5-411b-8a13-2282b143a427
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு அழகு சேர்த்தது வாணவேதிக்கை அங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசத்தின் அறுபதாவது பிறந்தநாளை மக்கள் அனைவரும் ஓரணியாகவும் பேரணியாகவும் திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாட்டின் கொண்டாட்டத்தில் பங்கேற்று திளைக்க பாடாங்கிற்குப் படையெடுத்த மக்கள் எதிர்காலம் எங்கள் காலம் எனக் குதூகலித்தனர்.

பாடாங் திடலில் ஒன்றுகூடிய 27,000 பேரும் இவ்வாண்டின் கருப்பொருளான ‘மாஜுலா சிங்கப்பூரா’வை விண்ணதிர முழங்கினர். அந்த முழக்கம் எட்டுத் திக்கும் எட்டியது.

முடியும் நாள்கள் மட்டுமல்ல, இனி விடியும் நாள்களும் எங்கள் சிங்கப்பூரின் சிறந்த நாள்களே என சிவப்பும் வெள்ளையுமாக அத்தனை மக்களும் ஆடிப் பாடினர். 

அறுபது என்பது ஆண்டிற்குத்தான் பழையது; நாட்டிற்கு அது இன்னும் இளம்பருவமே. அதனை உணர்த்தும் வகையில், இன்னும் சாதிக்க வேண்டும் என்னும் இளமைத் துடிப்பை தேசிய தினக் கொண்டாட்டத்தில் காணமுடிந்தது.

மக்கள் கொண்டாட்டத்தில் வெள்ளமெனத் திரண்டனர்.
மக்கள் கொண்டாட்டத்தில் வெள்ளமெனத் திரண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புரோமோன்டரி எனப்படும் மரினா பே கடல் முகப்பிலும் கொண்டாட்டம் களைகட்டியது.

எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முதல்முறையாகப் பல அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.

தேசிய தின அணிவகுப்பின் நேரடிக் காட்சி பாடாங்கிலிருந்து மரினா பே வரை நீட்டிக்கப்பட்டது. இரு இடங்களிலும் இடம்பெற்ற அங்கங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்றன.

அனைவரையும் உள்ளடக்கிய சமூக உணர்வைப் பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டின் தேசிய தின அன்பளிப்புப் பைகள் உடற்குறையுள்ளோரால் செய்யப்பட்ட கலைப்படைப்புகளால் சிறப்புச் சேர்த்தன.

அணிவகுப்பின் நெறியாளர்களாக மக்களை வசீகரித்தனர் வானொலிப் படைப்பாளர் ஜோக்கிம் கோமேஸ், உள்ளூர் கலைஞர் எபி சங்கரா, படைப்பாளர் சோனியா சியூ, நடிகை சித்தி கலீஜா.

மாலை 5.15 மணியளவில் அணிவகுப்பு தொடங்கும் முன் மேகம் திரண்டு தூறல் நனைத்தபோதும் மக்களின் தேசப்பற்று துளிகூட கரையவில்லை.

நிகழ்ச்சி நெறியாளர்களின் வருகையை அடுத்து மாலை 5.48 மணிக்கு நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணிவகுப்பிற்கு வருகை தந்தனர்.

‘தண்டர் ஸ்டிக்ஸ்’ எனும் பலூன் கோள்களை வெவ்வேறு மொழிப் பாடல்களுக்கு ஏற்ப தட்டி தேசியக் கொடியை அசைத்து மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.

‘தண்டர் ஸ்டிக்ஸ்’ எனும் பலூன் கோள்களை வெவ்வேறு மொழி பாடல்களுக்கு ஏற்ப தட்டி தேசியக் கொடியை அசைத்து மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.
‘தண்டர் ஸ்டிக்ஸ்’ எனும் பலூன் கோள்களை வெவ்வேறு மொழி பாடல்களுக்கு ஏற்ப தட்டி தேசியக் கொடியை அசைத்து மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வொரு தேசிய தின அணிவகுப்பிலும் பார்வையாளர்களைச் சுண்டி இழுக்கும் அங்கங்களில் ஒன்று செஞ்சிங்கங்களின் வான்குடை சாகசம்.

இந்த ஆண்டு அதை நிகழ்த்துவதற்கு வானிலை ஒத்துழைத்தது.

கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் உயரத்தில் பறந்த சி-130 ரக போர் விமானத்திலிருந்து மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துவந்தனர் ஏழு செஞ்சிங்க வான்குடை வீரர்கள்.

போர் விமானத்திலிருந்து குதித்த வீரர்கள் பத்திரமாகத் தரையிறங்க பெரும் உந்துசக்தியாக இருந்தது மக்கள் எழுப்பிய உற்சாக ஒலி.

அவர்களுடன் சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவினர் இணைந்து ‘ஜம்ப் ஆஃப் யூனிட்டி‘ எனப்படும் வான்குடை மூலம் ஒருங்கிணைந்து குதிக்கும் அங்கத்தை முதல்முறையாகப் படைத்தனர்.

முக்குளிப்பாளர்கள் மரினா பேயில் இறங்கினர்.

முதல்முறையாக செஞ்சிங்கங்களும் முக்குளிப்புப் பிரிவினரும் இணைந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தினர்.

வான்குடையுடன் குதிப்பதற்கு தங்களைத் தயார்ப்படுத்த மூன்று வார அடிப்படை வான்குடைப் பயிற்சி, ஒரு மாத ராணுவ வான்குடை சாகசப் பயிற்சியை வீரர்கள் மேற்கொண்டனர்.

வான்குடை சாகசம் கண்களுக்கு விருந்தளிக்க, செவிக்கு விருந்தளித்தன தொடர்ந்து வந்த இசை நிகழ்ச்சி. யூஹுவா, வெஸ்ட் ஸ்பிரிங், தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த இசைக்குழுக்கள் இசை விருந்து படைத்தனர்.

பாடாங்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை கண்டிராத வகையில் அதிக எண்ணிக்கையாக மொத்தம் 40 அணிகள் அணிவகுப்பில் பங்கேற்றன.

வெவ்வேறு பின்னணிகளிலிருந்து ஏறத்தாழ 2,100 பேர் அணிவகுப்பிலும் கொண்டாட்டத்திலும் பங்கேற்றனர்.

ஆறு மரியாதை காவல் அணிகள், சிங்கப்பூர் ஆயுதப்படையின் கொடியணி, சிங்கப்பூர் ஆயுதப்படை, உள்துறைக் குழுவின் ஆதரவு அணிகள், இளையர் சீருடை அணிகள், இசைக்குழு, வாய்ப்பாட்டுக் குழு ஆகியவை அந்த 40 அணிகளில் அடங்கும்.

தேசிய தின அணிவகுப்பின் தலைமைத் தளபதி லெஃப்டினென்ட் கர்னல் ஃபிர்தவுஸ் கஸாலி, அணிவகுப்பின் ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி லிம் ஜியே ஹுய் இருவரின் தலைமையிலான தேசிய தின அணிவகுப்பின் சடங்குபூர்வ அணிவகுப்பு அங்கம் இடம்பெற்றது.

இதில் முதன்முறையாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மரியாதை காவல் அணியில் இடம்பெற்றது. 10ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியர் படையும் முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் இடம்பெற்றது.

மாலை 6.25 மணிக்கு முன்னாள் பிரதமர் லீ சியன் லூங், இரண்டாவது முறையாக மூத்த அமைச்சர் என்ற முறையில் அணிவகுப்பில் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர்களான டோனி டான், ஹலிமா யாக்கோப், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் ஆகியோரும் அணிவகுப்பிற்கு வந்தனர்.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வெளிநாட்டுத் தலைவர்களை அணிவகுப்பு வரவேற்றது.

புருணை மன்னர் ஹசனல் போல்கியா, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் சார்பில் மலேசியத் துணைப் பிரதமரும் நகர்ப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஸாமாட் ஹமிடி ஆகியோர் வருகை அளித்தனர்.

பிரதமர் என்ற முறையில் இரண்டாவது முறையாக அணிவகுப்பில் கலந்துகொண்ட திரு லாரன்ஸ் வோங், மாலை 6.29 மணிக்கு அரங்கத்தை வந்தடைந்தார்.

பின்னர், மாலை 6.35 மணிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அணிவகுப்பிற்கு வந்தார்.

அதிபர் தர்மன் பாடாங்கிற்கு வந்த சிறிது நேரத்தில் அரங்கமே ஒன்றுசேர்ந்து தேசிய கீதத்தைப் பாட, ‘சிஎச்-47எஸ்டிஃஎப் ஹெவிலிஃப்ட்’ ஹெலிகாப்டர் சிங்கப்பூர்க் கொடியை ஏந்தி வானில் சென்றது மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தந்தது.

அதன்பிறகு ஆறு எஃப்-15 ரக போர் விமானங்களும் நான்கு எஃப்-16 ரக போர் விமானங்களும் பாடாங்கிற்கு மேலுள்ள வான்வெளியில் சாகசம் படைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிறகு அணிவகுப்புப் படையினரைப் பார்வையிட்ட திரு தர்மனுக்கு மரியாதை பீரங்கிக் குண்டுகள் 21 முறை முழங்கின.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் உற்சாகத்தில் இருந்த மக்களைப் பார்த்து கொடியசைத்தார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் உற்சாகத்தில் இருந்த மக்களைப் பார்த்து கொடியசைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதைத்தொடர்ந்து தேசிய தின அணிவகுப்பின் மரியாதை காவல் அணிகள் மூன்று முறை ‘ஃபியூ டி ஜுவா’ எனப்படும் ஆனந்த வேட்டு முழக்கத்தை அரங்கேற்றின.

எஸ்ஜி 60 கொண்டாட்டத்தை முன்னிட்டு எஃப்-15 எஸ்ஜி ஈகல்ஸ், எஃப்-16 ஃபைட்டிங் பெல்கன்ஸ் போர் விமானங்கள் வானில் சிறப்புக் காட்சியை அரங்கேற்றின.

தேசிய தின அணிவகுப்பின் கொடியணி முதலில் அணிவகுத்து அரங்கத்திலிருந்து விடைபெற்றது.

பிறகு தேசிய தின அணிவகுப்பின் மரியாதை காவல் அணிகள் அணிவகுத்து பாடாங்கிலிருந்து விடைபெற்றன.

முதல் முறையாக பார்வையாளர்கள் பக்கத்திலிருந்தே பார்க்கும் வகையில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் கொடியணி, சிங்கப்பூர் ஆயுதப்படை, உள்துறைக் குழுவின் ஆதரவு அணிகள், இளைய சீருடை அமைப்புகள், சிங்கப்பூர் ஆயுதப்படையின் முழுத் தொண்டூழியர் அணிப் படை முன்னோக்கி அணிவகுத்து அரங்கத்திலிருந்து விடைபெற்றனர்.

அதன்பிறகு, நான்கு முக்கியக் கருப்பொருள்களை உள்ளடக்கிய காட்சிப் படைப்புகள் தொடங்கின.

முதல் படைப்பான ‘நமது மக்கள், நமது பன்முகத்தன்மை’ அங்கத்தில் ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி மூவரும் முதல்முறையாகப் பாடாங்கில் மேடையேறினர்.

அவர்களுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் இளம் பாடகி பல்லவி, புகழ்பெற்ற ரேப் கலைஞர் யங் ராஜா பாடல்கள் பாடி மகிழவைத்தனர்.

‘நமது எதிர்காலம், நமது லட்சியம்’, ‘நமது மீள்திறன், நமது உணர்வு’, ‘நமது பலம், நமது ஒற்றுமை’ என இதர அம்சங்களுடன் காட்சிப் படைப்புகள் இடம்பெற்றன.

விறுவிறுப்பான இசை மழை, கண்களுக்கு விருந்தளித்த வண்ண ஒளிக் காட்சிகள் என காட்சிப் படைப்புகள் களைகட்டின.

ஒவ்வொரு கலைப் படைப்பிற்குப் பிறகும் வண்ண வாணவேடிக்கைகள் விண்ணில் மிளிர்ந்தன.

பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம், அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறு 60 பெரிய எஸ்ஜி 60 பந்துகள் உருட்டப்பட்டன.

இறுதியாக, பல வண்ணங்களில் வானம் வாணவேடிக்கையால் ஒளிர்ந்தது முத்தாய்ப்பாக அமைந்தது.

கண்கவர் வாணவேடிக்கையைப் பார்த்தவாறு தேசப்பற்றோடு மக்கள் சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்