ஜோகூர் பாரு: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கான (ஜேஎஸ்-எஸ்இஸெட்) திட்டமிடுதல், இந்த ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து நிகழவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைகளால் வேகமெடுக்க உள்ளதாக ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் லீ திங் ஹான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பொருளியல் அமைச்சின் தலைமை இயக்குநர், சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் நிரந்தரச் செயலாளர் ஆகிய இருவரது தலைமையில் முதல் ‘ஜேஎஸ்-எஸ்இஸெட்’ செயற்குழுக் கூட்டம் மே 30ஆம் தேதி நடந்ததாக அவர் கூறினார்.
மலேசிய, சிங்கப்பூர் பணிக்குழுக்கள் இணைந்து இந்த ‘ஜேஎஸ்-எஸ்இஸெட்’ திட்டம் குறித்து விவரமாகக் கலந்துரையாடுவார்கள் என இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளும் முடிவெடுத்ததாக திரு லீ குறிப்பிட்டார்.
இவர் ஜோகூர் மாநிலத்தின் முதலீடு, வர்த்தக, பயனீட்டு விவகாரங்கள் மற்றும் மனிதவளக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
“இதையடுத்து, இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு ஜூன் மாத நடுப்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸியும் வருகை தருவார்,” என்று கூறப்பட்டது.
மாத இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பணிக்குழுக்கள் பயிலரங்கு ஒன்றில் இணைந்து இருதரப்பும் முன்வைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஜேஎஸ்-எஸ்இஸெட்’ ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் பற்றிப் பணிக்குழுக்களில் உள்ளோர் கலந்துரையாடுவர் என்றும் இந்த ஒப்பந்தம் ஆண்டின் பிற்பாதியில் கையெழுத்தாகும் என்றும் திரு லீ தெரிவித்தார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை உருவாக்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 11ஆம் தேதியன்று இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
தொடர்புடைய செய்திகள்
‘ஜேஎஸ்-எஸ்இஸெட்’ திட்டத்தின் ஒரு பகுதியானது ஜோகூர், சிங்கப்பூர் சுங்கச்சாவடி, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் வளாகங்களில் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தும் நடைமுறையாகும். இது ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.

