வருங்காலத் தேவைக்காக 49 ஹெக்டர் நிலப்பகுதியை ஜூரோங் நகராண்மைக் கழகம் (ஜேடிசி) மீட்க இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
பாசிர் ரிஸ்சில் உள்ள லேரோங் ஹாலுஸ் அருகே நீரால் சூழ்ந்த பகுதியை அது மீட்கத் திட்டமிடுவதாக நம்பப்படுகிறது.
மீட்கப்பட்டு உருவாக்கப்படும் புதிய நிலப்பகுதி பாடாங் திடலைப் போல ஏறத்தாழ 11 மடங்கு பெரிதாக இருக்கும். அது மீட்கப்படுவதால் பாசிர் ரிஸ், லோரோங் ஹாலுஸ் படகுத் துறைகளைக் காண வருவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அருகிலுள்ள கடலடித் தாவரங்கள் மற்றும் சதுப்புநிலத் திட்டுக்களிலும் லேசான தாக்கம் இருக்கக்கூடும்.
அந்த மீட்பு மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டது.
தற்போது பாசிர் ரிஸ்சிலும் கிழக்கு ஜோகூர் நீரிணையிலும் மீன்பண்ணைகளாகத் திகழும் படக்குத்துறைகள் இரண்டும் கடல்சார் வழிகளுக்கும் பணிகளுக்கும் ஏற்ற புதிய பகுதிகளாக மாற்றப்படும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 16) அளித்த பதிலில் ஜேடிசி இந்த விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளது.
நிலமீட்புக்கான தேதி எதுவும் குறிக்கப்படவில்லை என்று அது தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மீட்பினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கும் அறிக்கை தொடர்பான பொதுமக்களின் கருத்துகளையும் மதிப்பீட்டுக் குழு கண்டறிந்து அளித்துள்ள பரிந்துரைகளையும் தான் மறுஆய்வு செய்து வருவதாகக் கூறி உள்ளது.
“பரிந்துரைகளும் மேம்பாட்டுத் திட்டங்களும் இறுதி செய்யப்பட்ட பின்னரே மீட்புக்கான பணிகள் தொடங்கும். அது எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை,” என்று ஜேடிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
வேலைகளைத் தொடங்கும் முன்னர் சுற்றுச்சூழலையும் திட்டமிடலுக்கான தேவைகளையும் விரிவாக அலசி ஆராய்ந்து உறுதி செய்யப்படும் என்றும் அது தெரிவித்து உள்ளது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் வளர்ச்சியை வழிநடத்தும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முதன்மைத் திட்டத்தில், புதிய நிலமானது, தொழில்துறை மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

