தனிநபர் பாதுகாப்பு ஆணை வழங்க வேண்டும் என்று கோரி ஆடவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உணவு, பணம் தராமல் தனது மனைவி தன்னை வறுமையில் தள்ளியதாகக் கூறி அவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
ஆனால் மனுவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இல்லாத ஒரு வழக்கின் தீர்ப்பை உதாரணமாக சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு நீதிபதி சோ கியான் பெங் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனது மனைவிக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு ஆணை, குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கும் ஆணை உள்ளிட்டவற்றுக்கு கணவர் விண்ணப்பித்திருந்தார்.
ஏற்கெனவே தம்பதியினர் விவாகரத்து நடைமுறைகளை எடுத்திருந்தனர்.
குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கும் ஆணை, பாதிக்கப்பட்ட நபரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டிற்குள் அல்லது வீட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு ஒருவர் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது.
இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். மூவரின் பெயர்களையோ விவரங்களையோ நீதிமன்றம் வெளியிடவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி தன்னைக் கட்டுப்படுத்தி மனரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தியதால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டதாக கணவர் குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் உதவி கோரி விண்ணப்பித்து, அது அங்கீகரிக்கப்பட்ட பிறகே தம்மால் மீண்டும் சொந்தக் காலில் நிற்க முடிந்ததாகவும் மனைவியின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடிந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

