தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் சமர்ப்பித்த தண்டனைக் குறைப்பு மனுவில் பிழைகள் இருந்ததால் நீதிபதி அவரைக் கடிந்துகொண்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 60 வயது ஜெரெமி ஃபிரான்சிஸ் குரூஸ், தனது முன்னாள் முதலாளியை ஏமாற்றியதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில், அரசாங்கத் தரப்பு 14 முதல் 16 மாதச் சிறைத்தண்டனை கோரிய நிலையில், தற்காப்புத் தரப்பு வழக்கறிஞரான A. ரெவி ஷங்கர் அபராதம் விதிக்கும்படி கேட்டிருந்தார்.
ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, வழக்கறிஞர் ஷங்கர் தண்டனைக் குறைப்பு மனுவைச் சமர்ப்பித்தார்.
அந்த மனுவில் இலக்கணப் பிழைகள் மலிந்திருந்ததுடன் புரிந்துகொள்ளக் கடினமான வகையில் தேவைக்கு அதிகமான சொற்கள் நிரம்பியிருப்பதாக, மாவட்ட நீதிபதி லிம் சே ஹாவ் நவம்பர் 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்கள் தாங்கள் எழுத்துபூர்வமாகச் சமர்ப்பிக்கும் மனுக்களை, எளிமையான ஆங்கிலத்தில் எளிதில் படிக்கக்கூடிய வகையில் தயாரிக்க வேண்டும். இதனால் நீதிபதிகள் அந்த மனுக்களைப் படித்து, புரிந்துகொள்வதற்கான நேரம் மிச்சப்படும் என்று அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் ஷங்கரின் தண்டனைக் குறைப்பு மனுவைத் தாம் புரிந்துகொள்வதற்கு, நீதிமன்றத்தில் அதை வாய்மொழியாக முன்வைக்கச் சொன்னதாக அவர் கூறினார்.
குரூசுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் அரசாங்கத் தரப்பு, தற்காப்புத் தரப்பு என இருவருமே மேல்முறையீடு செய்தனர். ஆனால் பின்னர் குரூஸ் மேல்முறையீட்டைக் கைவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பூச்சி ஒழிப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தில் வேலைபார்த்த குரூஸ், பூச்சிக்கொல்லி மருந்துப் புகைக்கான பொருள்களை வாங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். இதன் தொடர்பில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர் மொத்தம் $190,455.60 மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
இவ்வழக்கில் தண்டனைக் குறைப்புக்கு வழக்கறிஞர் ஷங்கர் சமர்ப்பித்த மனுவின் முதல் பத்தியில் 176 சொற்களைக் கொண்ட ஒரே வாக்கியம் இடம்பெற்றிருப்பதாக நீதிபதி கூறினார்.
வழக்கறிஞர்தான் அந்த மனுவைத் தயாரித்தார் என்பதை அவரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டதாக நீதிபதி சொன்னார்.
அக்டோபர் 22ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அந்த மனுவைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு, வாய்மொழியாக அதைச் சுருங்கக்கூறும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.