பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நீதிமன்றத்தில் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாகப் பேசவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆங் செங் ஹோக் சாடியுள்ளார்.
வியாழக்கிழமையன்று ( நவம்பர் 7) பன்னிரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் நீதிமன்ற விசாரணையின்போது இவ்வாறு கூறப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின் தொடக்கத்தின்போது தெளிவுபடுத்துதலுக்கும் தனிப்பட்ட அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளதா என்று துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஆங், திரு சிங்கிடம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த திரு சிங், 2021 அக்டோபர் 3ஆம் தேதி பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானைச் சந்தித்த பிறகு மறுநாள் நாடாளுமன்றத்தில் பொய்யைத் தெளிவுபடுத்துவதில் அவருக்கு எந்தத் தடங்கலும் இருந்திருக்காது என்று கூறினார்.
ஆயினும், திருவாட்டி கான் மறுபடியும் பொய்யுரைத்ததை அடுத்து, அவர் உண்மையைச் சொல்வதற்குத் தனிப்பட்ட அறிக்கைக்கான தேவை இருப்பதாகத் தாம் எண்ணியிருந்ததாகத் திரு சிங் கூறினார்.
2021 அக்டோபர் 4 ஆம் தேதியன்று திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் எப்படி தெளிவுபடுத்தியிருப்பார் என்று வழக்கறிஞர் ஆங், திரு சிங்கிடம் கேட்டார்.
வேறு ஒன்றும் சொல்லாமல், தான் கூறிய கதை பொய் என்பதை மட்டும் சொல்லிவிட்டுத் திருவாட்டி கான் அமர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்காகக் காத்திருப்பார் என்று திரு சிங் எதிர்பார்த்தாரா என்று வழக்கறிஞர் ஆங் கேட்டார்.
வேறு என்ன கேள்விகள் கேட்கப்பட்டிருக்க முடியும் என்பது தமக்குத் தெரியாது எனக் கூறிய திரு சிங், குறைந்தபட்சமாகத் தன் சொந்த அனுபவங்களைக் கதைக்குள் புகுத்தியதையாவது திருவாட்டி கான் சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி கான், தான் பாலியல் வதைக்கு ஆளாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் அப்போது சொல்வார் என எதிர்பார்த்தாரா என்று கேட்ட வழக்கறிஞரிடம், “தமது சொந்த அனுபவங்களைப் பற்றி முழுமையாக அவர் சொல்வாரா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று திரு சிங் பதிலளித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி கானைக் கேள்வி கேட்பர் என எதிர்பார்க்கவில்லையா என்று வழக்கறிஞர் ஆங் மீண்டும் கேட்டார். “அதற்கு என்னால் பதில் கூற முடியாது,” என்றார் திரு சிங்.

