நீதிமன்றங்களுக்குச் சட்ட அறிவு கொண்ட இயந்திரங்கள் மட்டும் போதா என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியிருக்கிறார்.
சாமானியர்களின் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பளிக்கும் நல்ல இதயமுள்ள சிறந்த மனிதர்களும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இளம் வழக்கறிஞர்களைச் செதுக்க வேண்டியதன் அவசியத்தைத் திரு மேனன் வலியுறுத்தினார்.
“நானும் 20 ஆண்டுகள் தனியார் வழக்கறிஞராக இருந்துவிட்டுப் பொதுச் சேவைக்கு வந்தேன். அந்தப் பயணமும் அனுபவமும்தான் என் பார்வையை மாற்றின,’’ என்று தமது சொந்த வாழ்க்கையையே உதாரணமாகச் சுட்டினார் அவர்.
சிங்கப்பூர் நீதித்துறை தனது 200 ஆண்டுகால (1826 - 2026) வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்யும் வேளையில், தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை (மே 22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தொழில்நுட்பம், நீதித்துறையின் எதிர்காலம், சமூக ஊடகங்களுக்கு இடையே மக்களின் நம்பிக்கையைக் பேணும் உன்னதக் கோட்பாடு என்று பலவற்றைப் பற்றிக் கருத்துரைத்த அவர், இளம் வழக்கறிஞர்கள் பற்றியும் பேசினார்.
இன்றைய இளம் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பணிச் சூழலும் சவால்களும் முற்றிலும் வேறானவை என்றார் அவர். அவர்களின் எதிர்காலம் குறித்துச் சில தொலைநோக்குக் கருத்துகளைத் தலைமை நீதிபதி அப்போது முன்வைத்தார்.
சில ஆண்டுகளில் வெளியேறும் இளந்திறனாளர்கள்
அண்மை ஆய்வுகளின்படி, சட்டம் படித்துப் பெரிய கனவுகளோடு சட்டத் துறையில் நுழையும் இளம் வழக்கறிஞர்களில் கணிசமானோர், பணிக்குச் சேர்ந்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள்ளேயே இத்துறையை விட்டு முற்றிலும் வெளியேறத் திட்டமிடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பணிச்சுமையால் திணறும் இளம் வழக்கறிஞர்களை நோக்கி மூத்த தலைமுறையினர், “எங்கள் காலத்தில் நாங்கள் இதையெல்லாம் கடந்து வரவில்லையா?” எனக் கேட்டுப் புறந்தள்ளிவிடக்கூடாது என்றார் அவர்.
இன்று பணிக்கு வரும் இளையர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்களுக்குத் தகுந்த தொழில்முறை வழிகாட்டுதலோ அரவணைப்போ மூத்தவர்களிடம் இருந்து கிடைப்பதில்லை என்று கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய தலைமுறை இடைவெளியைக் குறைக்க தற்போது சீரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் திரு மேனன்.
மேலும், மூத்த தலைமுறையினர் தங்களின் பழங்காலக் கண்ணாடியைக் கொண்டு இளையர்களை மதிப்பிடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“இளம் வழக்கறிஞர்களின் திறமைக்குத் வழிகாட்டுவதைவிட, அவர்களின் தனித்துவச் சவால்களைப் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்துவது சிங்கப்பூர் நீதித்துறையின் எதிர்காலத்தை வளமிக்கதாக மாற்றும்,’’ என்றார் தலைமை நீதிபதி மேனன்.

