முஸ்தஃபா நிறுவனத்தின் மீது இணையத்தாக்குதல்

முஸ்தஃபா நிறுவனத்தின் மீது இணையத்தாக்குதல்

2 mins read
96a95028-8fa0-4491-b8ad-3a0981e05850
முஸ்தஃபா நிறுவனத்தின் மீது ஏப்ரல் 25ஆம் தேதி இணையத்தாக்குதல் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. ‘ஜம்போ குரூப்’ உணவக நிறுவனத்தின் மீதும் இணையத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உள்ளூரில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான முஸ்தஃபா நிறுவனத்தின் மீது இணையத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அதன் தரவுகள் கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏப்ரல் 25ஆம் தேதி தான் முஸ்தஃபா நிறுவனத்தின் மீது இணையத்தாக்குதல் நடத்தியதாக ‘பிரிச்போரம்’ என்னும் பக்கத்தில் இணைய ஊடுருவி ஒருவர் தகவல் வெளியிட்டார்.

இணையத்தாக்குதல் மூலம் முஸ்தஃபா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தகவலைத் திருடியதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தேகிக்கப்படும் இணைய ஊடுருவி முஸ்தஃபா நிறுவனத்திற்கு சொந்தமான 180 ஜிபி தரவுகளைத் திருடியதாக கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து முஸ்தஃபா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. தகுந்த அமைப்புகளிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடல் உணவுகளை வழங்கும் ‘ஜம்போ குரூப்’ உணவக நிறுவனத்தின் மீதும் இணையத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ரேன்சம்வேர்’ போன்ற நச்சுநிரல் சம்பவமாக கருதப்படுகிறது. இணையத்தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்திய ‘ஜம்போ குரூப்’ அது எப்போது நடந்தது, எவ்வளவு நேரம் நீடித்தது என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இணையத் தாக்குதல் நடத்தியவர்களிடம் நிறுவனம் சமாதானம் செய்துகொண்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.

நிறுவனத்தின் தரவுகள் ஏதும் சட்டவிரோதமாக நீக்கப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ‘ஜம்போ குரூப்’ குறிப்பிட்டது.

இந்த இணையத்தாக்குதலால் நிறுவனத்தின் அன்றாட வர்த்தக வேலைகளில் பாதிப்புகள் ஏதும் நடக்கவில்லை என்று அது தெரிவித்தது.

இது குறித்து காவல்துறை, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம், தனிநபர் தரவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் ‘ஜம்போ குரூப்’ கூறியது.

குறிப்புச் சொற்கள்