தென்கிழக்காசிய இளையருக்கான தனிநபர் சுவர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணி ஆறு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளது.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூன் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதிவரை நடைபெற்ற போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஆறு வெண்கலப் பதக்கங்களையும் அணி வென்றது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 12 வயது கரீனா சஷிகுமாரும் அவரது அண்ணன் 14 வயது ஜக்ரிஷ் சஷிகுமாரும் 13, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் மாபெரும் வெற்றியாளர் பட்டங்களைப் பெற்றனர்.
கடந்த மாதம், ஆசிய ஜூனியர் தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று, அந்தப் பட்டத்தை பெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமைக்குச் சொந்தகாரரானார் கரீனா.
"அந்தப் பட்டத்தை மீண்டும் வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், சக வீரர்கள் என அனைவரது ஆதரவும் எனது வெற்றிக்குக் காரணம். பயிற்சியில் கவனம் செலுத்தி, பயிற்றுவிப்பாளர்களின் அறிவுரைகளைக் கேட்டு, ஒவ்வொரு போட்டியையும் கவனமாக அணுகினேன்," என்றார் கரீனா.
அவரது சகோதரரான ஜக்ரிஷ், 2023ஆம் ஆண்டு தாய்லாந்துத் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வென்று சிங்கப்பூரின் முதல் தென்கிழக்காசிய இளையருக்கான தனிநபர் சுவர்ப்பந்து வெற்றியாளராக வந்தார்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்த சுவர்பந்து அணியின் 15 வயது இரட்டையர்கள் நைஷா சிங், ரெஹான் சிங் இருவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி அசத்தினர்.
“கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பலன் கிடைத்துள்ளது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பதக்கம் வென்றதில் பெருமை," என்றார் ரெஹான் சிங்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய பயிற்சியாளர்கள் லூகாஸ் காண்ட்ரோடோவிக்ஸ், லாரன்ஸ் குவான், குழு மேலாளர் லி லி ஆகியோர் தலைமையில் சிங்கப்பூர் அணி இப்போட்டிகளில் பங்கேற்றது.
"ஒட்டுமொத்தமாக சிங்கப்பூர் அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த முறை 6 பட்டங்களை வென்று முன்னேற்றம் கண்டுள்ளோம்," என்று அணியின் செயல்பாட்டைக் குறிப்பிட்டார் திரு லூகாஸ்.

