மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் இனி விரிவான மதிப்பெண் தரவுகளை அறிந்துகொள்ள இயலாது

3 mins read
693d91c9-0e53-417b-9f54-ad904a5da944
தனது மாணவர்களுடன் நன்யாங் தொடக்கக்கல்லூரியின் முதல்வர் திரு பங் சூன் ஹாவ் (நடுவில்) - படம்: நன்யாங் தொடக்கக்கல்லூரி

2025 முதல், தொடக்கல்லூரிகள் தங்கள் மாணவர்கள் மேல்நிலைத் தேர்வில் கல்வி ரீதியாக எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை மாணவர்களுக்கு வெளிப்படுத்தாது.

சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து 17 தொடக்கல்லூரிகளில் இருக்கும் முதல்வர்களும், மில்லெனியா கல்விநிலைய முதல்வரும் சேர்ந்து எடுத்த இந்த முடிவின் மூலம் மாணவர்களின் படித்தரத்தை மதிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அவர்களின் முழுமையான வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று ராஃபிள்ஸ் கல்விநிலைய முதல்வர் திரு ஆரோன் லோ இதுகுறித்த கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.

வெள்ளிக்கிழமை (21 பிப்ரவரி) மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுகொண்ட மாணவர்களுக்குப் பள்ளியில் இடம்பெற்ற அமர்வில், விழுக்காட்டு அடிப்படையில் மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் சிறப்பான தேர்ச்சி கண்டனர், அல்லது குறைந்தது மூன்று H2 பாடங்களில் தேர்ச்சி கண்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற எந்தவிதமான தரவும் காண்பிக்கப்படவில்லை.

முந்தைய ஆண்டுகளில் பள்ளிகளில் இது போன்ற தரவு மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட ஓர் ஆண்டில் தொடங்கிய மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளனர், உச்ச தேர்ச்சி கண்ட மாணவர்கள் யார் போன்ற தகவல்கள் பள்ளி இணையத்தளங்களில் வெளியிடப்படும்.

‘ஐபி’ எனப்படும் ‘இன்டர்நேஷனல் பக்கலோரே’ அமைப்பு 2023 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து உச்ச மதிப்பெண்ணாக 45 புள்ளிகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை தரவை வெளியிடுவதை நிறுத்தியத்திலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘இன்டர்நேஷனல் பக்கலோரே’ அமைப்பு மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர்களை ஒப்பிடுவதைத் தவிர்க்க இத்தகைய முடிவை எடுத்ததாக சென்றாண்டு தெரிவித்திருந்தது.

சில ஆண்டுகளாகவே பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண் தரவை அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் பகிர்வதை மெதுவாக குறைத்து கொண்டதாக திரு லோ தெரிவித்தார்.

“மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மீது நாம் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர்களின் வெற்றியைத் தனிநபர்களாகவும் பள்ளிகளிலிருந்து விடைபெறும் மாணவர்களாகவும் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்,” என்றார் திரு லோ.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதிலளித்திருந்த நன்யாங் தொடக்கல்லூரி முதல்வர் திரு பங் சூன் ஹாவ், “மாணவர்கள் தேர்வில் எவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஒட்டிய தரவை அவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதை விட, அவர்களின் பள்ளி பெருமை கொள்ளும் விதத்தில் மாணவர்கள் எவ்வாறு முழுமையாக முன்னேறியுள்ளனர் என்பதைப் பகிர விரும்புகிறோம்,” என்றார்.

தேசிய தொடக்கக்கல்லூரி மாணவியான டேனெல் கெய்லி பகோமோ, 18, இந்த முடிவை பெரிதும் ஆதரிக்கிறார். தன்னை இதர மாணவர்களுடன் இனி ஒப்பிட வேண்டாம் என்பதால் அவருக்கு மன நிறைவாக உள்ளது.

“சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர்களில் என் பெயர் இருக்குமா என்ற பதற்றம் எனக்கு இருக்கும். மேலும், அந்த பெயர்களில் நம் பெயர் வருமா என்று மாணவர்கள் யோசிப்பது இயல்பு தான்,” என்றார் டேனெல்.

யூனோயா தொடக்கக்கல்லூரியில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர் கேய்டென் சீ, 18, தனது பள்ளி எவ்வாறு தேர்ச்சி கண்டுள்ளது என்ற தகவலை அறிய முடியாமல் போவதை எண்ணி ஏமாற்றம் அடைகிறார்.

“மாணவர்கள் யார் சிறப்பாகச் செய்துள்ளனர் என்று அறிய மிக ஆவலுடன் இருப்பார்கள். அந்தத் தகவலை தெரிந்துகொள்வதால் நமக்கு மேலும் கல்வியில் சிறப்பாக செய்ய வேண்டுமென்ற ஊக்கம் அதிகரிக்கும். இந்த மாற்றம் எங்களின் முழுமையான வளர்ச்சிக்கு எவ்வித தாக்கத்தையும் அளிக்காது,” என்றார் கேய்டென்.

இதையடுத்து, மேல்நிலை தேர்வுகள் எழுதிய மாணவர்களின் வெற்றியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், பள்ளி முதல்வர்கள் இணைந்து எடுத்து இந்த முடிவைச் சிறந்தது என்று பாராட்டியிருந்தார்.

“வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டும் ஒரு மாணவரை மதிப்பிடாமல் அவர்களின் முழுமையான வளர்ச்சியை வைத்து மதிப்பிடுவது தான் வெற்றிக்கான சிறந்த தொடக்கம்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்