வரும் பொதுத்தேர்தலில் புதிய தனித்தொகுதியான ஜூரோங் சென்ட்ரலில் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளராகத் தற்போதைய ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியே யாவ் சுவென் போட்டியிடுவார்.
இதனை மசெக திங்கட்கிழமை (ஏப்ரல் 14) உறுதிப்படுத்தியது.
2020ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து ஜூரோங் சென்ட்ரல் தொகுதியை யாவ் சுவென் பிரதிநிதித்து வந்துள்ளார்.
இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குடியிருப்பாளர்களிடம் நேரடியாகச் சென்று, அவர்கள் சொல்லும் கருத்துகளைச் செவிமடுத்து, அவர்களுக்கு முழுமனத்துடன் சேவையாற்றி வருகிறேன்,” என்றார் யாவ் சுவென்.
இந்நிலையில், 2025 பொதுத்தேர்தலில் மீண்டும் ஜூரோங் சென்ட்ரல் வட்டாரத்தில் மசெக சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, ஜூரோங் சென்ட்ரலில் களமிறக்கவுள்ள வேட்பாளர் ஒருவரை எதிர்த்து யாவ் சுவென் போட்டி போடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

