புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் களமிறங்க தாம் விரும்புவதாக ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியே யாவ் சுவான் தெரிவித்துள்ளார்.
அக்குழுத்தொகுதியில் திரு சியே வழிநடத்தும் ஜூரோங் சென்ட்ரல் பிரிவு, வரும் தேர்தலில் தனித்தொகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு எதிர்க்கட்சி போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திரு சியே அவ்வாறு கூறினார்.
2020ல் ஜூரோங் குழுத்தொகுதியில் போட்டியிட்ட ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, ஜூரோங் சென்ட்ரலில் தன் வேட்பாளர் ஒருவரை களமிறக்கப்போவதாக இம்மாத முற்பகுதியில் அறிவித்திருந்தது.
“இந்தத் தனித்தொகுதிக்கு யார் வந்து போட்டியிடப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் யோசிப்பதும் ஆக்ககரமானதாக இருக்காது. ஆயினும், யாரோ ஒருவர் வந்து இங்கு போட்டியிட வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்று திரு சியே கூறினார்.
ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்கள் தங்களது நலன் கருதி முடிவெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு நல்லது என்றும் முக்கியமானது என்றும் திரு சியே சொன்னார்.
பிரதமர் வோங், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் அந்தத் தொகுதியில் தம்மை களமிறக்குவது குறித்த முடிவை எடுப்பார் என்றும் திரு சியே கூறினார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அணியில் இல்லாத நிலையில் தனித்தொகுதி வேட்பாளராக திரு சியே போட்டியிடக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, திரு சியே தமது அணுகுமுறையை மாற்றுவாரா என சிஎன்ஏ கேட்டதற்கு, “என் மந்திரம் என்னவென்றால், குடியிருப்பாளர்களை நாம் நல்லபடியாகப் பார்த்துக்கொள்கிறோம். மற்றது அதுவாகவே பார்த்துக்கொள்ளும்படி விட்டுவைப்போம்,” என்றார் அவர்.
மக்களைத் தாமும் தம் அணியினரும் தொடர்ந்து சந்தித்து வருவதாக திரு சியே கூறினார்.
அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதாகவும் திரு சியே கூறினார்.
“ஒவ்வொரு தேர்தலும் போட்டியும் வெவ்வேறானது. வரும் போட்டியை அதற்குரிய நேரத்தில் கையாள்வோம். முடிவாக, இது மக்களின் நம்பிக்கையையும் மனங்களையும் வெல்வது பற்றியதே,” என்றார் அவர்.

