கடந்த இரு பொதுத் தேர்தல்களில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) கோட்டையாக இருந்து வந்துள்ள ஜூரோங் குழுத்தொகுதி, எதிர்வரும் தேர்தலில் நான்கு வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்படும்.
ஜூரோங் குழுத்தொகுதியில் தற்போது உள்ள 132,272 வாக்காளர்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி, வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி, ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி, ஏற்கெனவே உள்ள ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி ஆகியவற்றுக்குப் பிரித்து விடப்படுவர்.
தற்போதைய ஜூரோங் குழுத்தொகுதியில் உள்ள 62,424 வாக்காளர்களையும் சேர்த்து, புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் 142,510 வாக்காளர்கள் இடம்பெறுவர். செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட்ட தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கையில் இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
ஏற்கெனவே உள்ள ஜூரோங் குழுத்தொகுதியின் சில பகுதிகளை இணைத்துக்கொள்வதுடன் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, யூஹுவா தனித்தொகுதி, ஹொங் கா நார்த் தனித்தொகுதி ஆகியவற்றையும் அது சேர்த்துக்கொள்ளும்.
இதற்கிடையே, ஜூரோங் குழுத்தொகுதியைச் சேர்ந்த 41,404 வாக்காளர்கள், புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் இடம்பெறுவர். ஜூரோங் வெஸ்ட், தாமான் ஜூரோங் ஆகியவற்றில் உள்ள சில பேட்டைகளை அத்தொகுதி சேர்த்துக்கொள்ளும். ஐந்து எம்.பி.க்களைக் கொண்ட இப்புதிய குழுத்தொகுதியில் 158,581 வாக்காளர்கள் இடம்பெறுவர்.
புதிய ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி, ஜூரோங் குழுத்தொகுதியிலிருந்து பிரிக்கப்படும். அதில் 29,620 வாக்காளர்கள் இடம்பெறுவர். ஜூரோங்கைச் சேர்ந்த 25,668 வாக்காளர்களும் யூஹுவா தனித்தொகுதியைச் சேர்ந்த எஞ்சிய வாக்காளர்களும் அதில் அடங்குவர்.
ஜூரோங் குழுத்தொகுதியைச் சேர்ந்த எஞ்சிய 2,776 வாக்காளர்கள், ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் சேர்க்கப்படுவர். அத்தொகுதியில் 122,891 வாக்காளர்கள் இடம்பெறுவர்.
மசெகவின் ஆகச் சிறப்பாகச் செயல்படும் தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ள ஜூரோங், 2015 தேர்தலில் 79.29 விழுக்காட்டு வாக்குகளையும் 2020 தேர்தலில் 74.61 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங் குழுத்தொகுதியின் வலுவான செயல்பாட்டுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் முக்கியமானவராக இருந்து வந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக, 20 ஆண்டுகளுக்குமேல் அத்தொகுதியை அவர் பிரதிநிதித்தார்.
தாமான் ஜூரோங் எம்.பி.யாக 2001ல் தமது அரசியல் பயணத்தைத் தொடங்கிய திரு தர்மன், அப்பகுதியில் முக்கியப் பிரதிநிதியாக இருந்து வந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2023ல் அவர் எம்.பி. பதவியிலிருந்து விலகினார்.