மூத்த அமைச்சராகிறார் கா.சண்முகம்

மூத்த அமைச்சராகிறார் கா.சண்முகம்

4 mins read
அமைச்சரவை மாற்றங்கள் ஜூலை 27ஆம் தேதி நடப்புக்கு வரும்
a2d99df5-c30d-4fbc-82fe-2ea82a00b475
பிரதமர் லாரன்ஸ் வோங் அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பதவி உயர்வு, பதவி மாற்றங்களுடன் புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

மாற்றம் காணும் அமைச்சரவையில் கா.சண்முகம் மூத்த அமைச்சராகிறார். அவர் தொடர்ந்து உள்துறை அமைச்சராகவும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நீடிப்பார்.

கடந்த 2025ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் புதுமுகங்களாக அறிமுகமான ஜெஃப்ரி சியாவ், டேவிட் நியோ, ஜாஸ்மின் லாவ், கோ பெ மிங் ஆகியோருடன் 2011ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த சிம் ஆன் ஆகிய ஐவரும் பதவி உயர்வு பெறுகின்றனர்.

பதவி மாற்றங்களைப் பிரதமர் வோங், புதன்கிழமை (ஜூலை 22) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். மாற்றங்கள் ஜூலை 27ஆம் தேதி நடப்புக்கு வரும்.

புதிய, இளம் தலைவர்கள் பெரிய பொறுப்புகளை ஏற்கத் தயாராய் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், தலைமைத்துவ மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெறுவதன் அவசியத்தை விளக்கினார்.

அமைச்சரவையின் ஆக மூத்த உறுப்பினர்களான, மூத்த அமைச்சராகும் கா.சண்முகம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இருவரும் இளம் அரசாங்கத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி, வழிகாட்டிகளாகச் செயல்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா.சண்முகம், அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா.சண்முகம், அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அமைச்சராகும் ஜெஃப்ரி சியாவ், டேவிட் நியோ

தற்காலிக அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த ஜெஃப்ரி சியாவ், டேவிட் நியோ இருவரும் அமைச்சர்களாகின்றனர். போக்குவரத்து அமைச்சராகவும் இரண்டாம் நிதி அமைச்சராகவும் திரு ஜெஃப்ரி சியாவ் இருப்பார். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் இரண்டாம் கல்வி அமைச்சராகவும் திரு டேவிட் நியோ பொறுப்பு வகிப்பார்.

திரு ஸாக்கி முகம்மது, முஸ்லிம் விவகாரங்களுக்குத் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார் என்று இம்மாதம் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து தற்காப்பு மூத்த துணை அமைச்சராக இருப்பார். நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சில் வகித்த பொறுப்பை அவர் துறப்பார்.

சிம் ஆன், ஜாஸ்மின் லாவ், கோ பெய் மிங் பதவி உயர்வு்

வெளியுறவு, உள்துறை அமைச்சுகளுக்கு இரண்டாம் அமைச்சராகப் பதவி உயர்வு பெறுகிறார் சிம் ஆன்.

ஜாஸ்மின் லாவ், கோ பெய் மிங் இருவரும் பதவி உயர்வு பெறுகின்றனர்.

மனிதவளத் தற்காலிக அமைச்சராகவும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சராகவும் திருவாட்டி ஜாஸ்மின் லாவ் பொறுப்பு வகிப்பார். கல்வி அமைச்சில் வகித்த பொறுப்பை அவர் கைவிடுவார்.

திரு கோ பெய் மிங், உள்துறை அமைச்சிலும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிலும் மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்படுவார்.

மனிதவள அமைச்சராகப் பொறுப்புவகித்த டாக்டர் டான் சீ லெங், வர்த்தக, தொழில் அமைச்சராகிறார். துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் இணைந்து வகிக்கும் அந்தப் பொறுப்பில், டாக்டர் டான் எரிசக்தி, தொழில் துறைகளுக்குப் பொறுப்பு வகிப்பார். துணைப் பிரதமர் கான் வர்த்தகத்திற்குப் பொறுப்பு வகிப்பார். வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து கிரேஸ் ஃபூ கவனித்துக்கொள்வார்.

2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து 14 மாதங்களாகியுள்ள நிலையில் பதவி மாற்றங்களைப் பிரதமர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியிலிருந்து திரு கோ போ கூன், இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் அண்மையில் விலகியுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் பிரதமர் அலுவலக அமைச்சராகப் பதவி வகிப்பார்.

வேலைகளுக்கும் ஊழியரணி உருமாற்றத்திற்கும் அரசாங்கம் அதிக முன்னுரிமை கொடுக்கும். அந்த மாற்றங்களை ஊழியர்கள் கையாள அரசாங்கத்துக்கும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுக்கும் முக்கியப் பணி காத்திருக்கிறது என்றார் திரு வோங்.

அதனால் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வலுவான அரசாங்கத்தை அமைக்கும் வண்ணம் திரு இங் சீ மெங்கை அமைச்சரவைக்குள் வர அழைப்புவிடுத்ததாகப் பிரதமர் விளக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக அரசியல் களத்தில் புதிதாக வந்துள்ள தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங், ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ‌ஷான் லோ இருவரும் புதிதாக அரசாங்கப் பதவியை ஏற்கின்றனர்.

திரு செஸியாங் மனிதவள அமைச்சுக்கும் வர்த்தக, தொழில் அமைச்சுக்கும் துணையமைச்சராக செப்டம்பர் 1ஆம் தேதி பதவி ஏற்பார்.

சுகாதார, கல்வி அமைச்சுகளுக்கான துணையமைச்சராகத் திரு ஷான் லோ பொறுப்பேற்பார். அவர் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அந்தப் பொறுப்புகளை ஏற்பார்.

அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தைச் சிங்கப்பூர் ஏற்க உள்ள நிலையில் வெளியுறவு அமைச்சுக்கு சவால்மிக்க ஆண்டாக அமையும் என்று வருணித்த பிரதமர் வோங், இந்த முக்கிய காலகட்டத்தில் அந்த அமைச்சை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார். ஆக, திரு ஆல்வின் டான் வர்த்தக, தொழில் அமைச்சிலிருந்து வெளியுறவு அமைச்சுக்கு மாற்றப்படுவார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். திரு ஆல்வின் டான், தொடர்ந்து தேசிய வளர்ச்சித் துணை அமைச்சராக இருப்பார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் அமைச்சரவையில் சேர்ந்த ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிலிருந்து உள்துறை அமைச்சுக்கு மாறுகிறார்.அவர் வெளியுறவுத் துணை அமைச்சர் பொறுப்பில் நீடிப்பார்.

தனியார் துறையிலிருந்து அரசாங்கத்திற்கு அண்மையில் வந்திருந்த அவர், நன்கு செயல்படுவதாக மெச்சிய திரு வோங், வெளியுறவு அமைச்சின் தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்தவும் அரசாங்கத்தில் பரந்துபட்ட அனுபவத்தை வழங்கவும் அந்த மாற்றம் செய்யப்படுவதாக விளக்கினார்.

வர்த்தக, தொழில் அமைச்சு இனி எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சு என்று பெயர் மாற்றம் காணவிருக்கிறது. எரிசக்தி விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதைப் புதிய பெயர் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மைக்கும் எதிர்காலத்திற்கும் அது முக்கியம் என்று கூறப்பட்டது. பெயர் மாற்றம், இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி நடப்புக்கு வரும்.

தற்போதைய சவால்களைக் களைய அனுபவமிக்கவர்களும் முன்னோக்கி வழிநடத்த புதிய தலைமுறையினரும் சிங்கப்பூருக்குத் தேவை என்பதைப் பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்லாரன்ஸ் வோங்அமைச்சரவை