தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழாசிரியர் பணி தலைசிறந்த சேவை: அமைச்சர் சண்முகம்

3 mins read
697b3178-ae7b-4436-b29d-b1285064c8c3
நல்லாசிரியர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: பே. கார்த்திகேயன்

இலைகளாலும், கிளைகளாலும், உறுதியான விழுதுகளாலும் நிழல் தந்து ஓர் ஆலமரம் ஆதரவு வழங்குவதுபோல், மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து கல்வியில் சிறந்து விளங்க ஆதரவும், அரவணைப்பும் நல்கி வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள் என்று அவர்களது அரும்பணியை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் பாராட்டியுள்ளார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் சண்முகம் உரையாற்றினார்.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்கப்பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஒன்பது தமிழ் ஆசிரியர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்கப்பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஒன்பது தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழ் முரசு நாளி­தழ், சிங்கப்பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஒன்பது தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. - படம்: பே. கார்த்திகேயன்

திருவாட்டி வீரராஜு தேவிகா (சி.எச்.ஐ.ஜெ. தோ பாயோ தொடக்கப் பள்ளி) திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன் (செங்காங் தொடக்கப் பள்ளி), திருவாட்டி சாரதா ராமன் (உட்குரோவ் தொடக்கப் பள்ளி), திருவாட்டி ஜைனுல் பானு ஷாகுல் ஹமீட் (டெயி உயர்நிலைப் பள்ளி), திருவாட்டி மலர்விழி பெருமாள் (ஈசூன் உயர்நிலைப் பள்ளி), திரு சேதுராமன் ரமேஷ் ராஜா (பூன் லே உயர்நிலைப் பள்ளி) ஆகியோர்க்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

செல்வி பாவனா இராஜாராம் (குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி), திருவாட்டி ஜெம்பு கிருஷ்ணமூர்த்தி நளினி (ஏங்கர் கிரீன் தொடக்கப்பள்ளி) இருவரும் தேசிய கல்விக் கழகத்தின் சிறந்த பயிற்சியாசிரியர் விருது பெற்றனர்.

முனைவர் எஸ். பி. ஜெயராஜதாஸ் பாண்டியன் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த 23 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் இந்த விருது 200க்கும் மேலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மற்றும் புகுமுகக் கல்வி நிலைய ஆசிரியர்களை அங்கீகரித்துள்ளது.

சவால்மிக்க உலகச் சூழலில் நுட்பமாக சிந்திப்பவர்களாகவும், கருத்துப் பரிமாற்றம் செய்பவர்களாகவும், தங்களைத் தயார்நிலையில் வைத்துக்கொள்பவர்களாகவும் மாணவர்கள் விளங்க வேண்டிய அவசியத்தை அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

அண்மையில் டெக் கீ சமூக மேம்பாட்டுக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் துணிவுடன் சவால்களை எதிர்கொள்வதன் அவசியத்தை மாணவர்களிடம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் எடுத்துரைத்ததை சுட்டினார் திரு சண்முகம்.

நல்ல பண்புகளை மாணவர்களுக்குப் புகட்டுவது ஆசிரியர்தான் என்ற அமைச்சர், “நல்லாசிரியர்களே மாணவர்களுக்கும், இளையர்களுக்கும் முன்னோடியாவர், முன்மாதிரியாவர். மனிதப் பண்புகள், அறங்கள், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றை தமிழ்மொழியோடு கற்பிப்பது முக்கியமாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், விழுமியங்கள், மரபு, பண்பாட்டுக் கூறுகளையும் கற்பிப்பது தமிழாசிரியர்களின் கடமையும் தனித்தன்மையும் ஆகும்,” என்று தெரிவித்தார்.

மாறி வரும் உலகத்தில் அம்மாற்றங்களை சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நன்னெறிகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கதைகள் வழியாகவும், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆர்வத்தை ஊட்டும் வகையிலும் கற்பிக்கும் திருவாட்டி ஜெயசுதாவையும், இக்கால இளையர்களின் விருப்பங்களை மனதிற்கொண்டு தம் வகுப்பில் தமிழ்சார்ந்த தகவல்களைத் திரட்ட பொருத்தமான சமூக ஊடகங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திருவாட்டி ஜைனுல் பானுவையும் முன்மாதிரிகளாக அமைச்சர் சுட்டினார்.

கண்ணதாசன் பாடல்களால் ஈர்க்கப்பட்டு இசையை தம் பாடங்களில் இணைத்துக்கொண்டு பாடல்கள் வழி மாணவர்களது மனத்தில் மொழியின் உணர்வை ஆழமாகப் பதியச் செய்த வாழ்நாள் சாதனையாளர் முனைவர் எஸ். பி. ஜெயராஜதாஸ் பாண்டியனையும் அவர் பாராட்டினார்.

தமிழ்மொழி வளர்ச்சியில் சமூக அமைப்புகளின் பங்கை குறிப்பிட்ட அமைச்சர், “சிங்கப்பூரில் தமிழ்மொழி நிலைபெறுவதற்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு அப்பாலும் மொழியைப் பயன்படுத்துவதற்கும் தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. முத்தான இந்த மூன்று அமைப்புகளும் சமூக அமைப்புகளோடு இனைந்து தமிழ் நிலைபெற ஆற்றும் பணி பெருமைக்குரியது. இது மேலும் முனைப்போடு தொடரவேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் முரசு நாளிதழ் நமது சமூகத்தின் குரலாக திகழ்கிறது என்று கூறிய அமைச்சர், எதிர்வரும் தமிழ் முரசின் 90வது பிறந்தநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என்றும் சொன்னார்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய தமிழ் முர­சு நாளிதழின் இணை ஆசி­ரி­ய­ரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான வீ.பழ­னிச்­சாமி, விருதிற்குக் குவிந்த 511 பரிந்துரைகளிலிருந்தும் தேர்வு விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது ஏற்பாட்டுக் குழுவினருக்கு மிகுந்த சவாலாக இருந்ததாகக் குறிப்­பிட்டார்.

தமிழ் முரசு நாளிதழ் தனது 90வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாட இருப்பதால், அதனை முன்னிட்டு நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்ச் சமுதாயம், நாளிதழோடு கைகோத்து இக்கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் எனத் தாம் நம்புவதாகவும் திரு பழனிச்சாமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்