தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாழ்வாரத்திலிருந்து 60 தெய்வச் சிலைகளை அகற்ற குடியிருப்பாளருக்கு உத்தரவு

2 mins read
91202993-aef2-4d33-b5ab-03d60ffba13a
பொதுத் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அப்புறப்படுத்தும் குடியிருப்பாளர் ராஜா, 62. - படம்: ஷின் மின்
multi-img1 of 2

பொதுத் தாழ்வாரத்தில் 60க்கும் அதிகமான தெய்வச் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததன் தொடர்பில் அண்மையில் அண்டைவீட்டாரிடமிருந்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அச்சிலைகளை நீக்குவதில் ஏற்பட்ட சிரமம் குறித்து குடியிருப்பாளர் ஒருவர் புலம்பினார்.

புளோக் 64 காலாங் பாருவில் உள்ள அந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிற்கு ஜூலை 30ஆம் தேதி சென்ற ‘8வோர்ல்ட்’ செய்தியாளர் ஒருவர், அந்த வீட்டிற்கு வெளியே 50 மீட்டர் நீளமுள்ள தாழ்வாரத்தில் பலதரப்பட்ட தெய்வச் சிலைகள் இருந்ததைக் கண்டார்.

இந்திய தெய்வச் சிலைகளுடன் அவ்விடத்தில் சிரிக்கும் புத்தர், குவான்யின் போதிசத்வா, நரக ராஜா, இயேசு கிறிஸ்து உள்ளிட்ட சிலைகளும் இருந்தன.

இவை போதாது என நாற்காலிகளுடன் பெரிய மேசை, அதன் மீது நொறுக்குத்தீனி, முட்டை அட்டைப் பெட்டிகள், அளவுகோல்கள் போன்றவையும் அவ்விடத்தில் காணப்பட்டன.
இவை போதாது என நாற்காலிகளுடன் பெரிய மேசை, அதன் மீது நொறுக்குத்தீனி, முட்டை அட்டைப் பெட்டிகள், அளவுகோல்கள் போன்றவையும் அவ்விடத்தில் காணப்பட்டன. - படம்: ஷின் மின்

தாழ்வாரத்தின் மற்றொரு புறம் மிதிவண்டிகள், அட்டைப் பெட்டிகள், சாய டின்கள், துருப்பிடிக்காத எஃகு அலமாரிகள் போன்றவை இருந்தன.

தாழ்வாரத்தில் ஒருபுறம் தெய்வச் சிலைகளும் மற்றொரு புறம் இதர பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன.
தாழ்வாரத்தில் ஒருபுறம் தெய்வச் சிலைகளும் மற்றொரு புறம் இதர பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன. - படம்: ஷின் மின்

இந்நிலையில், இவை குறித்து கடந்த 25 ஆண்டு காலமாக தமக்குப் புகார்கள் வரவில்லை என ராஜா எனும் 62 வயது குடியிருப்பாளர் ஒருவர் ஷின் மின் சீன நாளிதழிடம் கூறினார். இருந்தாலும், நடமாட்டத்துக்கு இவை இடையூறாக இருப்பதாக அண்டைவீட்டார் சிலர் 8வோர்ல்ட் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

வெளியே சென்றுவர தம்முடைய 90 வயது முதலாளி சக்கர நாற்காலியைச் சார்ந்திருப்பதாக பணிப்பெண் ஒருவர் சொன்னார்.

“தாழ்வாரத்தில் சக்கர நாற்காலியைத் தள்ளும்போது நான் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிலைகள் மீது மோதிவிடுவது குறித்து எனக்குக் கவலை.

“இப்பகுதியைக் கடந்து செல்வதைத் தவிர்க்க மற்றொரு புறம் உள்ள மின்தூக்கியை நான் பயன்படுத்துவேன்,” என்றார் அப்பணிப்பெண்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு குடியிருப்பாளர், “ஒருவரது சமய நம்பிக்கையை என்னால் புரிந்து, மதிப்பளிக்க முடிகிறது. அதேவேளையில், பொது இடங்களில் இடையூறு விளைவிக்கப்படக் கூடாது.

“இந்தச் சிலைகள் மற்றும் பொருள்களால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி, தாழ்வாரத்தின் தோற்றத்தைப் பாதிப்பது மட்டுமன்றி, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கிறது,” என்றார்.

ஷின் மின்னிடம் பேசிய ராஜா, தமது வீட்டிற்கு வெளியே 62 தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் ஆறு சிலைகளை மட்டுமே தாம் வழிபடுவதாகச் சொன்னார்.

தாழ்வாரத்தில் இருந்த மற்ற சமயப் பொருள்கள் தம் அண்டைவீட்டாரால் வைக்கப்பட்டவை எனக் கூறிய அவர், அவற்றை வரிசைப்படுத்துவது மட்டுமே தமது பொறுப்பு என்றார்.

தாழ்வாரத்தைச் சுத்தமாக வைத்திருக்க இதற்கு முன்பு நகர மன்றம் தம்மைத் தொடர்புகொண்டதாகவும் ராஜா சொன்னார்.

இந்நிலையில், அந்தத் தெய்வச் சிலைகளையும் இதர பொருள்களையும் பொதுத் தாழ்வாரத்திலிருந்து திங்கட்கிழமைக்குள் (ஆகஸ்ட் 5) அகற்ற ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டதாக ஷின் மின் தெரிவித்தது.

இதுகுறித்து கருத்துரைத்த ராஜா, “சிலர் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் அவற்றைப் பகிர்ந்தனர். எனக்கு அவர்களது நோக்கம் புரியவில்லை. என் இஷ்டத்துக்கு அவற்றை நகர்த்த முடியாது,” என்றார்.

எனினும், இந்த உத்தரவுக்கு தாம் இணங்குவதாகவும் பொருள்களை நீக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலைமையைக் கண்காணிக்க ராஜாவின் வீட்டிற்கு அதிகாரிகளை அனுப்பப் போவதாக ஜாலான் புசார் நகர மன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்