கம்போங் கிளாம் நோன்புப் பெருநாள் சந்தைக் கடைகளுக்கான வாடகை $1,000 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கடைக்காரர்களின் செலவினம் குறையும் என்றும் இதன் காரணமாக அவர்கள் விற்கும் பொருள்களின் விலையும் குறைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பலனடைய வேண்டும் என்றும் கம்போங் கிளாம் கடைகள் குழுமத்தின் தலைவர் ஸாக்கி மாரோஃப் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் சந்தையில் உள்ள கடைகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அங்கு 103 கடைகள் மட்டும் திறக்கப்படும்.
சந்தை இருக்கும் இடத்துக்குக் காரில் செல்ல விரும்புவோரை ஈர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாக்தாத் ஸ்திரீட்டில் உள்ள 30 கடைகள் சுல்தான் கேட் பார்க்கிற்கு இடமாற்றம் செய்யப்படும். இதன்மூலம், பாதுகாப்பு, சாலை மூடல் ஆகியவற்றுக்காக ஏற்படும் செலவுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்வைத்த கருத்துகளையொட்டி இம்மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இடமாற்றம் காரணமாக கந்தஹார் ஸ்திரீட்டில் ஏறத்தாழ 50லிருந்து 60 வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோன்புப் பெருநாள் சந்தை பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கி 33 நாள்களுக்குத் திறந்திருக்கும். மேலும் பாரம்பரிய உணவு, நோன்புப் பெருநாள் உணவு வகைகளைக் கொண்ட மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
சந்தையில் பாரம்பரிய மற்றும் சமகால நேரடி நிகழ்ச்சிகள் படைக்கப்படும்.
வார இறுதி நாள்களில் (வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை) நடைபெறும் நிகழ்வுகளின்போது, சுல்தான் பள்ளிவாசலில் ஓர் ஒளிக்காட்சியும் இடம்பெறும்.
அரபு எழுத்துக்கலை, காப்பித் தூளைச் சோப்பாக மாற்றுவது போன்ற நடைமுறைப் பயிரங்குகள் முந்தைய சந்தைகளின் ஒரு பகுதியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு 900,000 வருகையாளர்கள் நோன்புப் பெருநாள் சந்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

