கராச்சி: பாகிஸ்தான் மீட்புப் பணியாளர்கள், கராச்சியில் இடிந்துவிழுந்த கட்டட இடிபாடுகளிலிருந்து 27 சடலங்களை மீட்டுள்ளனர். அவர்கள் மூன்று நாள் தேடல் பணிகளை முடித்துள்ளனர்.
குண்டர் கும்பல் வன்முறையால் நிறைந்த கராச்சியின் லயாரி வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கட்டடம் சரிந்து விழுவதற்கு முன் குடியிருப்பாளர்கள் விரிசல் சத்தத்தைக் கேட்டதாகக் குறிப்பிட்டனர். அந்த வட்டாரம் பாகிஸ்தானில் ஆக ஆபத்தான பகுதியாகக் கருதப்படுகிறது.
“இடிபாடுகளில் சிக்கியிருந்த அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டன. எனவே தேடல் பணிகளை முடித்துக்கொள்கிறோம்,” என்று உயர் அரசாங்க அதிகாரி ஜாவெட் நபி கொசொ கூறினார்.
“இடிபாடுகளில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 27,” என்றார் அவர்.
கட்டடத்தில் தங்குவது ஆபத்தானது என்றும் அங்கிருந்து வெளியேறும்படி 2022ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை அறிக்கைகள் அனுப்பப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர். இருப்பினும் ஒருசில குடியிருப்பாளர்களும் வீட்டு உரிமையாளர்களும் அவ்வாறு எந்த அறிக்கையும் வரவில்லை என்றனர்.
அங்கு வசித்தோரில் பெரும்பாலோர் ஏழ்மையில் உள்ளவர்கள் என்று சிறுபான்மை மக்கள் குழுவின் ஆர்வலர் கூறினார்.
சனிக்கிழமையில் 50 ஆபத்தான கட்டடங்களில் ஐந்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாக திரு கொசொ சொன்னார்.
“அதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது. ஆபத்தான அனைத்து கட்டடங்களிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்படும் வரை அந்த நடவடிக்கை தொடரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானின் பல இடங்களில் கூரைகளும் கட்டடங்களும் இடிந்துவிழுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. 240 மில்லியன் மக்கள் வாழும் அங்கு மோசமான பாதுகாப்புத் தரநிலைகள் காரணமாக அந்த நிலைமை உள்ளது.
கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் வாழும் கராச்சியில் மோசமான கட்டுமானம், சட்டவிரோதமாகத் தங்குவது, காலம் கடந்த உள்கட்டமைப்பு, கூட்ட நெரிசல் ஆகியவை வழக்கமாக உள்ளன.