தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்புக்கு வழிவிடும் காத்திப் முகாம்

2 mins read
faa500b1-bcc2-4274-a344-13c88fd3f5b0
ஈசூனின் அமைந்துள்ள காத்திப் முகாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈசூனில் உள்ள காத்திப் முகாம் புதிய குடியிருப்புக்கு வழிவிடும் வகையில் இன்னோர் இடத்துக்கு மாற்றப்படுகிறது.

அந்த முகாமின் செயல்பாடுகள் தற்போது பெரிய அளவிலான மறுவடிவமைப்புக்கு உட்பட்டுள்ள அமோய் கீ முகாமுக்கு மாற்றப்படும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு ஜூலை 23ஆம் தேதி பதிலளித்த தற்காப்பு அமைச்சு, அமோய் கீ முகாம் மற்றும் அதன் துணை உள்கட்டமைப்பும் வசதிகளின் மறுவடிவமைப்பும் ஏப்ரல் 2024ல் தொடங்கியது என்றும் கட்டுமானங்கள் 2030ல் முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது.

அங் மோ கியோவில் அமைந்துள்ள அமோய் கீ முகாமின் நிலப் பயன்பாடு, காத்திப் முகாமிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட இடங்கள், சொத்துகள், வசதிகள் ஆகியவற்றுக்கு இடமளிக்க தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, இந்த முகாமில் மற்ற செயல்பாட்டுப் பிரிவுகளும், அவற்றின் பராமரிப்பு, நிர்வாக அமைப்புகளும் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சு கூறியது. குடியிருப்பு வசதிகளை உருவாக்குவதற்காக காத்திப் முகாம் உள்ள இடம் அரசிடம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் கூறியது.

காத்திப் முகாம் தற்போது சுமார் 29 ஹெக்டர் நிலத்தில் அமைந்துள்ளது. ஈசூன் நகரத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் 70 ஹெக்டர் செஞ்சாரு பேட்டைக்கு அடுத்ததாக இந்த இடம் இருக்கும்.

முகாமின் நிலத்தை குடியிருப்புக்காக மீண்டும் பயன்படுத்துவது, 2040ஆம் ஆண்டுக்குள் செஞ்சாருவில் திட்டமிடப்பட்டுள்ள 10,000 வீடுகளுடன் சேர்க்கப்படும்.

அமோய் கீ முகாமைப் பொறுத்தவரை, 1971ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் திரும்பப் பெறப்பட்டதன் ஒரு பகுதியாக சிங்கப்பூருக்கு ஒப்படைக்கப்பட்ட சொத்துகளில் இதுவும் ஒன்று.

2001ஆம் ஆண்டு முதல், அமோய் கீ முகாம் தேசிய மாணவர் ராணுவப் படையின் தலைமையகத்தைக் கொண்டிருந்தது. மேலும் புதிய வீடுகள் கட்டுவதற்கு வழிவிட, அண்மைய ஆண்டுகளில் அந்த முகாமின் அளவு சுமார் 89 ஹெக்டரிலிருந்து 52 ஹெக்டராக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் வரைவு பெருந்திட்டம் 2025 கண்காட்சியின்படி, இந்தப் பகுதியில் ஒரு புதிய பூங்கா, வர்த்தக வசதிகள், சுகாதார வசதிகள் முதலியவை இருக்கும்.

முகாமைப் பொறுத்தவரை, ஒரு கட்டுமான அறிவிப்பில் குறிப்பிட்டிருந்ததன்படி, 48 புளோக்குகள் இடிக்கப்படும் என்றும், 35 புளோக்குகள் கட்டப்படும் என்றும், அதனுடன் ஒரு காற்பந்துத் திடல், மெதுவோட்டப் பாதை கட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2029ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்