இளமை என்ற கருப்பொருளில் நடைபெற்ற தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, கவிமாலையின் ‘யாப்பு எனும் காரிகை’ நிகழ்ச்சி மே 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஃபுட்சிங் அரங்கில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 800 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிப்போரைக் கௌரவிக்கும் ‘கணையாழி’ விருது திரு அ.கி. வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இளம் கவிஞர் தங்க முத்திரை விருதை சு.தீபக் பெற்றுக்கொண்டார். அத்துடன், சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருதை மஹேஷ்குமாரின் ‘ஒரு புத்த மதியம்’ பெற்றது.
கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன் எழுதிய தமிழே அமிழ்தே எனும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் இன்பா தொடக்கவுரை ஆற்றினார்.
உடல்நலக் குறைவால் நிகழ்ச்சிக்கு வருகை அளிக்க இயலாத உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகத்திற்குப் பதிலாகச் சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளை நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
அவருடன் வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, சிண்டாவின் தலைமை நிர்வாகி ரா. அன்பரசு, முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் இரா. தினகரன், முஹம்மது இர்ஷாத், இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ராஜாராம், எம்இஎஸ் குழுமத் தலைவர் அப்துல் ஜலீல், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத்தலைவர் டி. சந்துரு போன்றோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பின்னர் உரையாற்றிய திரு நசீர் கனி, தமிழ் மொழி மாதத்தில் பங்களித்த தமிழ் அமைப்புகள், தமிழ் ஊடகங்கள், ஆதரவு நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாராட்டினார்.
“தமிழை எப்படியெல்லாம் வளர்க்க முடியும் என்பதைக் காட்டியுள்ள சிங்கப்பூர் மக்கள் முன்மாதிரிகள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் சண்முகத்தின் உரையைத் திரு அன்பரசு வாசித்தார். அதிகாரபூர்வ தகவல் தொடர்புகளிலும் ஊடகங்களிலும் தமிழ் வலுவாகப் பங்கு வகித்தாலும் வீட்டில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“தமிழ் பேசும் குடும்பங்களின் விகிதம், 2010ல் 3.3 விழுக்காட்டிலிருந்து 2020ல் 2.5 விழுக்காட்டுக்குக் குறைந்தது. வீட்டில் ஆங்கிலம் பேசுவதைத் தேர்ந்தெடுப்பதே முக்கியக் காரணமாக இருக்கலாம்,” என்றும் அமைச்சரின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘யாப்பு எனும் காரிகை’ என்ற வரலாற்றுப் புனைவு நாடகத்தில் தமிழக நடிகை நீலிமா இசை பங்கேற்றார். அதிபதி நாடகக் குழுவினரோடு இணைந்து மேடையேற்றப்பட்ட இதில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். ஏ.கே.டி குழுவினரின் ஜிக்காட்டத்துடன் விழா நிறைவடைந்தது.