தென்கிழக்காசியப் பாரம்பரிய உடையான ‘கிபாயா’ யுனெஸ்கோவின் கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (டிசம்பர் 4) பராகுவே நாட்டின் தலைநகர் அசுன்சியோனில் நடைபெற்ற அமர்வில் இது அறிவிக்கப்பட்டது.
மேல்சட்டையும் ‘பாத்தேக்’ துணியிலான பாவாடையும் அடங்கிய பாரம்பரிய ‘கெபாயா’ உடை மட்டுமின்றி அதன் மரபு, ஆடையை அணியும் முறை, அதை வடிவமைத்துத் தயாரிக்கும் முறை போன்றவையும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Committee) பரிந்துரைத்த ஐந்து மதிப்பீட்டு அளவுகோல்களையும் எட்டிய நிலையில் ‘கெபாயா’ அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள பல சமூகங்கள் அணியும் இந்த ஆடையைப் பட்டியலில் சேர்க்க சிங்கப்பூர், புருணை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளும் கூட்டாக முன்மொழிந்தன.
“பாரம்பரிய கெபாயா உடை கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கொண்டாடப்பட வேண்டிய செய்தி. தென்கிழக்கு ஆசியாவிலேயே நாடுகளின் கூட்டு முயற்சியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆகப் பெரிய பரிந்துரை இது. இந்தப் பட்டியல், அதன் கலாசார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மட்டுமின்றி, நாடுகளுக்கிடையிலான கலாசாரப் புரிதல், ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு,” என்று கூறியுள்ளார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும், யுனெஸ்கோவிற்கான சிங்கப்பூர் தேசிய ஆணையத்தின் தலைவருமான எட்வின் டோங்.
தலைமுறைகள் தாண்டித் தொடரும் பாரம்பரியக் கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகைகள் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்படும். கடந்த 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ‘உணவங்காடி நிலையங்கள்’ அப்படியலில் சேர்ந்ததையடுத்து, இரண்டாவதாகக் ‘கெபாயா’ இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தின் தொடர்பில் தேசிய அளவிலும் அனைத்துலக மட்டத்திலும் அமைந்த சமூகப் பங்கேற்பு பாராட்டத்தக்கது என்று தேசிய மரபுடைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கழகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தீவெங்கிலும் பத்து வட்டாரங்களில் 40,000 பார்வையாளர்களை ஈர்த்த ‘கெபாயா’ கண்காட்சியை நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வடிவமைப்புத் துறையுடன் இணைந்து மாணவர்கள் வடிவமைத்த ‘கெபாயா’ கருப்பொருளில் அமைந்த பொருள்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இது இளையர்களிடம் இதனைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 2025ஆம் ஆண்டு முதல் தானியங்கி விற்பனை இயந்திரங்களின் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ள இயலும். மேலும், பள்ளி மாணவர்களிடம் இதனை எடுத்துச் செல்லும் விதமாக வளத் தொகுப்புகளும் (resource kit), மின்னிலக்க விளையாட்டும் அறிமுகம் காண உள்ளன.