சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும் அரசியலும் எப்போதும் ஊழலற்றதாக இருக்க வேண்டும். பொதுச் சேவை தொடர்பான பொறுப்பில் இருப்போர், நேர்மைக்கான ஆக உயர்வான தரநிலைகளை நிலைநிறுத்துவது அவசியம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் வோங் வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
ஈஸ்வரனின் அரசியல் வாழ்க்கை இவ்வாறு முடிவடைந்தது, தமக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நண்பருக்கு, உடன் பணிபுரிபவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது துன்பத்தை அளித்தாலும், தேவை எழும்போது அவ்வாறு செய்வது நம் கடமை. நம் அரசாங்க அமைப்புமுறையும் அரசியலும் எப்போதும் ஊழலற்றதாக விளங்க வேண்டும்,” என்று அக்டோபர் 3ஆம் தேதி அவர் தெரிவித்தார்.
பழிச்சொல்லுக்கு அப்பால் பொதுச் சேவையில் உள்ளோர் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இது முக்கியமானது, பேரம் பேச முடியாதது என்றும் அவர் சுட்டினார்.
“திரு ஈஸ்வரன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் தமது குடியிருப்பாளர்களின் கவலைகளைக் கேட்டறிந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ள வசதிகளை மேம்படுத்தியுள்ளார். வெவ்வேறு அமைச்சுகளில் பொறுப்பேற்று கணிசமான வகையில் பங்களித்துள்ளார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் கடந்தகால பங்களிப்புகள் யாவும் இந்தத் தவற்றைச் சரியாக்கிவிட முடியாது என்றார் பிரதமர் வோங்.
“மனிதனின் பலவீனங்களுக்கு எதிராக எந்த ஓர் அரசாங்க அமைப்புமுறையாலும் தன்னை முழுமையாகத் தற்காத்துக்கொள்ள முடியாது. நாம் என்னதான் ஊழலுக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொண்டாலும், அவ்வப்போது ஒருசிலர் ஆசைகளுக்கு இடங்கொடுத்துப் பாதை தவறிச் செல்லலாம். அதுதான் திரு ஈஸ்வரனின் வழக்கிலும் நடந்தது,” என்று அறிக்கையில் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஊழல் தொடர்பாக ஈஸ்வரன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலறிந்த லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி), அந்த விவகாரத்தை அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
விசாரணையை அதிகாரபூர்வமாகத் தொடங்க அதிகாரிகளுக்கு திரு லீ தமது ஒப்புதலை வழங்கியதை அடுத்து, சிபிஐபி இந்த விவகாரம் குறித்து முழுமையாகவும் முனைப்புடனும் செயல்பட்டது.
“சிபிஐபி கண்டறிந்ததை அரசாங்கத் தரப்பினர் மதிப்பிட்டு திரு ஈஸ்வரன் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தனர். திரு ஈஸ்வரன் ஓர் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மக்கள் செயல் கட்சி உறுப்பினராக தம் பணிகளிலிருந்து விலகிக்கொண்டார். குற்றத்தை ஒப்புக்கொண்டார். தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,” என்றது அறிக்கை.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எது சரியோ, அதைத்தான் நாங்கள் செய்வோம் என்ற உறுதியளிப்புடன் அறிக்கை முடிவுற்றது.