வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரை பொருளியலுக்கு உகந்த நாடாக வைத்திருக்கத் தேவையான அம்சங்களைக் கண்டறிவது நான்காம் தலைமுறைத் (4G) தலைவர்களின் இன்றியமையாத பணி என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற சீக்கிய கலாசாரத் திருவிழாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
“நிலத்திற்கும் உழைப்புக்கும் இங்கு ஆகக்கூடிய அதிகச் செலவுகள், நாம் ஏன் இங்கு பணத்தைக் கொட்ட வேண்டும் என்ற கேள்வியை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடத்தில் ஏற்படுத்தக்கூடும்.
“அதேபோல, ‘ஊழியர்களை நியமிப்பது அவ்வளவு எளிதல்ல’ என்பதால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சென்றவர்கள், அங்கு நாம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யக்கூடிய, கடின உழைப்பு போடும் துடிப்புமிக்க பல மில்லியன் மக்கள் இருப்பதை அறிவர்.
“எனவே, பொருளியலுக்கு உகந்ததாக நாட்டை வைத்திருப்பது எப்படி என்பதே நான்காம் தலைமுறைத் தலைவர்கள் முன் இருக்கக்கூடிய கேள்வி.
“அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் கையாள வேண்டி உள்ளவை என்பதால் இத்தகைய பிரச்சினைகள் முக்கியமானவை.
“இந்த சவால்களை நான்காம் தலைமுறைத் தலைவர்கள் சில காலமாகவே சிந்தித்து வருகிறார்கள்,” என்றார் திரு சண்முகம்.
தொடர்புடைய செய்திகள்
இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் சிறப்பான நிலையில் உள்ளது என்று கூறிய அவர், அதற்கு வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வேலைகள் ஆகியவற்றை அவர் உதாரணமாகச் சுட்டினார்.
அதேநேரம், கடுமையான உலகளாவிய சவால்கள் நமக்கு இருப்பதையும் அமைச்சர் சண்முகம் நினைவூட்டினார்.
‘நாம் ராஸ் கிர்தான் தர்பார்’ என்ற தலைப்பில் சீக்கிய சமூக வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்கும் நான்கு நாள் கலாசார நிகழ்வு சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்றது.
டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெற்ற அந்த நிகழ்வுகளில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.