சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட் கும்பலின் முக்கிய நபர் என்று கருதப்படும் 33 வயது ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அவர் பிடிபட்ட தகவலை காவல்துறையும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) காலை தெரிவித்தன.
“மின்சிகரெட் கும்பலின் பின்னணியில் இயங்கும் முக்கியமான நபர் அந்த ஆடவர்,” என்று அவை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோதக் கும்பலைக் கண்டுபிடிக்க அந்த இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும் அக்டோபர் 10ஆம் தேதி தீவு முழுவதும் நடத்திய சோதனையில் ஆடவர் சிக்கினார்.
அண்மையில், சுகாதார அறிவியல் ஆணையம் கைப்பற்றிய $6.5 மில்லியன் மின்சிகரெட்டுகள் தொடர்பான விசாரணையோடு சம்பந்தப்பட்டது அந்தக் கைது நடவடிக்கை. மின்சிகரெட் தொடர்பான சாதனங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.
“கைதான ஆடவர், மின்சிகரெட்டுகளை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்து, இங்கு உள்ளோருக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது,” என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
ஆடவர் மீது அக்டோபர் 11ஆம் தேதி பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. நீதித்துறை நடவடிக்கையில் குறுக்கிட்டது, வீட்டுக்குள் அத்துமீறி நுழையத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவை.
புகையிலை விற்பனை, விளம்பரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் சட்டவிரோத மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாகவும் அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

