தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் உள்ள முக்கியமான தகவல் அமைப்புகள் வெளிநாட்டு அரசு ஆதரவு பெற்ற குழுவால் தாக்கப்பட்டன: சண்முகம்

2 mins read
33b75d72-3ffe-410d-8721-df8d4293cb97
தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின்மீது வெளிநாட்டு அரசு ஆதரவு பெற்ற இணையப் பாதுகாப்பு உளவுக் குழுவான UNC3886 நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர்.

ஜூலை 18 அன்று முதல் முறையாக சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியவரின் பெயரைக் குறிப்பிட்ட தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், வெளிநாட்டு அரசுடன் தொடர்புடைய மேம்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல் (ஏபிடி) அமைப்பினரிடமிருந்து கடுமையான மிரட்டல்களை எதிர்கொள்கிறது என்று கூறினார்.

இவர்கள் நன்கு வளப்படுத்தப்பட்ட தாக்குதல்காரர்கள், மற்றவர்களால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். முக்கியமான தகவல்களைத் திருட அல்லது அத்தியாவசிய சேவைகளைச் சீர்குலைக்க, நீண்ட காலத்திற்கு உளவு பார்க்க, மற்ற பிற நோக்கங்களுக்காக தங்கள் கட்டமைப்புகளில் பதுங்கியிருக்கிறார்கள்.

“UNC3886 எங்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் நமது தேசியப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது,” என்று சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் 10ஆம் ஆண்டு விழா இரவு விருந்தில் திரு சண்முகம் கூறினார்.

“நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே, UNC3886 நமது முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்குகிறது,” என்றும் அமைச்சர் கூறினார்.

திரு. சண்முகம் UNC3886ன் ஆதரவாளர்களின் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் நிபுணர்கள் அந்தக் குழு சீனாவுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளனர்.

இணையப் பாதுகாப்பு நிறுவனமான மாண்டியன்ட் முதன்முதலில் சீன உளவுக் குழுவை 2022ல் கண்டறிந்தது.

UNC3886 உலக அளவில் தற்காப்பு, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு முதலிய துறைகளில் முக்கிய உத்திபூர்வ அமைப்புகளைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.

UNC3886 போன்ற ஏபிடி ஊடுருவிகள், கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அதற்கென உருவாக்கப்பட்ட தீங்குநிரல், பாதிக்கப்பட்டவரின் கணினியில் கிடைக்கும் கருவிகள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டமைப்புக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறுகிறார்கள்.

ஏபிடி தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இணையக் கட்டமைப்பிலிருந்து அகற்றப்பட்டாலும், அவர்கள் இணையக் கட்டமைப்புக்குள் மீண்டும் நுழைய முயற்சிப்பார்கள். சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.

இணையப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் இந்தத் தாக்குதலைத் தீவிரமாகக் கையாண்டு வருவதாகவும், முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் திரு சண்முகம் கூறினார். 2021 முதல் 2024 வரை சிங்கப்பூரில், சந்தேகிக்கப்படும் ஏபிடி தாக்குதல்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

“இதனால் பொருளியல் தாக்கங்களும் உள்ளன. நமது வங்கிகள், விமான நிலையம் மற்றும் தொழில்கள் செயல்பட முடியாது. நமது பொருளியல் கணிசமாகப் பாதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்