புதிய இஸ்லாமியப் பள்ளிக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும்

2 mins read
81b73121-0e9a-408e-b51f-6c0af1385382
ஜாலான் சுல்தான் சாலைக்கும் விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் அமைந்துள்ள மலபார் பள்ளிவாசல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதல் இஸ்லாமியக் கல்லூரிக்கு வழிகாட்ட, உயர்நிலை ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்படும்.

அத்துடன், வாடகை வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்கள் சொந்த வீடுகளுக்கு மாறக் கைகொடுக்கும் உதவித்திட்டம் ஒன்றும் விரிவுபடுத்தப்படும்.

மலாய், முஸ்லிம் சமூக விவகாரங்களின் தொடர்பில் திங்கட்கிழமை (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாசார, சமூக, இளையர் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டன.

சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரியின் மேம்பாட்டை வழிகாட்டும் நோக்கில் புதிய கல்விக்கான ஆலோசனைக்குழுச் சந்திப்பை ஜூன் மாதம் நடத்தும். அந்தக் குழுவில் ஒன்பது உள்ளூர்த் தலைவர்களும் அனைத்துலகத் தலைவர்களும் இடம்பெறுவர்.

முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அந்தக் குழுவை வழிநடத்துவார். ஒருமைப்பாடு மிக்க சமூகங்களுக்கான அனைத்துலக மாநாட்டிற்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெறும்.

சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் முஹம்மது நசிருதின் முஹம்மது நாசிர், எகிப்தின் பெரும் முஃப்தி நசிர் முஹம்மது அயாத், அல்-அசார் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் சலாமா டாவூத் ஆகியோர் குழுவில் இடம்பெறுகின்றனர்.

2024ல் உருவாக்கப்பட்ட ‘வக்காஃப் மஷாராகாட் சிங்கப்பூரா’ என்ற சமூக அறக்கட்டளை நிதியம், சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரிக்கு நிதியளிக்கும் முதன்மையான அமைப்பாகச் செயல்படும்.

இதுவரை $6.25 மில்லியன் நிதியை இந்த அமைப்பு திரட்டியுள்ளது. இந்தத் தொகையில் கிட்டத்தட்ட $1 மில்லியன், ரொக்கமாகத் தரப்படுகிறது. எஞ்சிய தொகை, பற்றுறுதிகளின் வழி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கல்லூரிக்கு நிதியளிப்பது மட்டுமின்றி இந்தத் தொகை, சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாசல்களின் குத்தகைகளைப் புதுப்பிப்பதற்கும் ‘அசாடிஸா’ எனப்படும் சமய ஆசிரியர்களை மேம்படுத்துவது போன்ற மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இஸ்லாமியக் கல்லூரி 2028ல் செயல்படத் தொடங்கும். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், எகிப்தின் டார் அல்-இஃப்தா, ஜோர்தான் பல்கலைக்கழகம், மொரோக்கோவின் அல்-கராவியின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் பங்காளித்துவத்தை அமைப்பதற்கான பணிகளை அந்தக் கல்லூரி தற்போது மேற்கொண்டு வருகிறது.

வாடகை வீடுகளில் தங்கும் குடும்பங்களுக்கு உதவும் ‘புரோஜெக்ட் டியன் அட் எம்3’ (Project Dian@M3), கூடுதலாக 1,000 வீடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

2025ன் இறுதிக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் அடங்கும் வட்டாரங்களின் எண்ணிக்கை, ஆறிலிருந்து 11ஆக அதிகரிக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.

மார்சிலிங்-யூ டி, நீ சூன், பாசிர் ரிஸ்-பொங்கோல், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகியவை தற்போது இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கும் வட்டாரங்கள் ஆகும்.

மேற்கூறப்பட்ட 11 வட்டாரங்களுமே காஸா பகுதி மனிதாபிமான காரணங்களுக்காக நிதித்திரட்டு மேற்கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்