குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது எட்டு ஆண்டுகள் நடப்பில் இருக்கும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் பிள்ளை பெற்றபிறகு திருவாட்டி ஷெரல் சிம் அதிக சிரமத்துக்கு உள்ளானார். அவரின் கணவர் இரண்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். பிள்ளை பெற்றுக்கொண்ட முதல் மாதத்தில், 38 வயதான திருவாட்டி சிம்முக்கு அவரது மாமியார் உதவினார்.
இருப்பினும், குறைவான தாய்ப்பாலினாலும் தூக்கத்தினாலும் திருவாட்டி சிம்மின் மனநலம் பாதிக்கப்பட்டது.
குழந்தை எலோரா லியூவின் முதல் மாத மருத்துவப் பரிசோதனையின்போது, சமூக ஊழியர் ஒருவர் திருவாட்டி சிம்முக்கு ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
“இந்த ஆதரவினால் நான் இந்தப் பயணத்தில் தனியாக இருக்கிறேன் என்ற உணர்வு நீங்கியது,” என்றார் திருவாட்டி சிம்.
‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் இருக்கும் குடும்பங்களை மதிப்பிட, 2017 முதல் 2022 வரை ஐந்தாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பரவலாக திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தையும் செயல்திறனையும் மதிப்பிடுவதே அந்த ஆய்வின் நோக்கம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம் உதவியாக இருந்ததை ஆய்வு கண்டறிந்தது.
கடைசி மூன்று வட்டாரங்களான குவீன்ஸ்டவுன், கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட் ஆகியவை திட்டத்தில் கலந்துகொண்டதும், அது 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதையும் சென்றடையும்.
தொடர்புடைய செய்திகள்
‘கிட்ஸ்டார்ட்’ நடத்துநர்கள் ஆரம்பகாலப் பிள்ளைப் பருவம், சமூகப் பணி, ஆலோசனை வழங்குதல், உளவியல், சமூக சேவைகள் வழங்குவது ஆகியவற்றில் தகுதியானவர்கள் அல்லது அனுபவம் பெற்றவர்கள்.
திருவாட்டி சிம்மின் ‘கிட்ஸ்டார்ட்’ நடத்துநர் ஒவ்வொரு மாதமும் அவரது வீட்டுக்குச் சென்று, அவருக்கு இருக்கக்கூடிய ஐயங்களைத் தீர்த்துவைப்பார். மகளைக் குளிப்பாட்டி விடுவதற்கு ஏற்ற தண்ணீர் வெப்பநிலை முதல், குழந்தை பால் குடிக்க மறுக்கும்போது செய்யவேண்டியவை வரை அவர் கற்றுக்கொடுப்பார்.
‘கிட்ஸ்டார்ட்’ பாடத்திட்டத்தில் ஆறு முக்கியப் பகுதிகள் உள்ளன. குழந்தை மேம்பாடு, குழந்தைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சத்துணவு, தரமான பெற்றோர் - குழந்தை தொடர்பு, குடும்ப நலன் ஆகியவை அவற்றில் அடங்கும்.
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.