ஹவ்காங்கில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மாது, வியட்னாமிய நாட்டைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த 35 வயது மாதின் பெயர் டாவோ தி ஹோங்.
கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்களில் சிலர், வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் வருவதாக அப்பகுதியில் பணிபுரியும் வியட்னாமிய நாட்டவர்கள் தெரிவித்தனர்.
அவரது நண்பரான 40 வயதுகளில் உள்ள சேலி என்பவர், திருவாட்டி டாவோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறியதாகத் தெரிவித்தார்.
ஹவ்காங் ஸ்திரீட் 21ல் புளோக் 210 உள்ள குவான் லோங் நிப்பான் பெயிண்ட் கடையில் வேலை பார்த்த அவரை, அதே கடையில் வேலை பார்த்த 42 வயது ஆடவர் கத்தியால் பலமுறை குத்தினார்.
டிசம்பர் 10ஆம் தேதி பட்டப் பகலில் 11.00 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் கத்தியுடன் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
அதே கடையில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் இருவருக்கும் இடையே தலையிட்டு காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஹனோயைச் சேர்ந்த சேலி, டிசம்பர் 11ஆம் தேதியன்று விடுமுறை எடுத்துக் கொண்டு, கடையின் பின்புறத்தில் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இடத்தில் மெழுகுவத்தி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சிறிது நேரம் இங்கு இருக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
இதற்கிடையே, திருவாட்டி டாவோவின் கணவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ் தகவல் வெளியிட்டிருந்தது.
ஆனால் அவருக்கு உரிய நேரத்தில் கடவுச்சீட்டு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவரும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் காயம் அடைந்த இருவரை சாங்கி பொது மருத்துவமனைக்கும், ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றதாக முன்னதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.
சந்தேக நபர் மீது டிசம்பர் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது