உயிர்க்கொல்லி குப்பை சம்பவங்கள் கூடின

உயிர்க்கொல்லி குப்பை சம்பவங்கள் கூடின

2 mins read
bea893a8-3618-4235-a05a-db2fd6734836
2021 செப்டம்பர் 8ஆம் தேதி புளோக் 33 பென்டமியர் ரோடு வீவக புளோக்கின் தரைத்தளத்தில் வீசப்பட்டு கிடந்த வீட்டு உபயோகப் பொருள்கள். படம்: ஷின் மின் -

கருணாநிதி துர்கா

சிங்கப்பூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிர்க்கொல்லி குப்பை போடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பொறுப்பற்ற செயலை பொதுச் சுகாதார மன்றமும் அடித்தளத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பைக் கருதி மூன்று தொகுதிகளில் குடியிருப்பாளர்களிடம் இப்பிரச்சினை பற்றிப் பேசப்பட்டது.

தெம்பனிஸ் நார்த், மவுண்ட்பேட்டன், கொலம் ஆயர் குடியிருப்பாளர்களுடன் ஜனவரி 11, 13, 17ஆம் தேதிகளில் பொதுச் சுகாதார மன்றம், அடித்தள உறுப்பினர்கள் இப்பிரச்சினையைப் பற்றி கலந்துரையாடினர்.

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை தகுந்த நடவடிக்கையாக குடியிருப்பாளர்கள் பலர் கருதுகின்றனர்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தட்டுகளைத் திரும்ப வைத்தல், முறையாகக் குப்பைகளை அகற்றுதல், கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் ஆகிய மூன்று முக்கிய கூறுகளை வலியுறுத்தும் வகையில் எட்டு வகை ஆங் பாவ் ரொக்கப் பொட்டலங்கள் வடிவமைக்கப்பட்டன.

"கொவிட்-19 பெருந்தொற்றின்போது அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிர்க்கொல்லி குப்பை சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

"அதில் சுமார் 15% குற்றவாளிகள் இன்றும் கண்டறியப்படவில்லை," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

"இச்செயலை பொதுச் சுகாதார மன்றம் கடுமையாக கண்டிக்கிறது. உயிர்க்கொல்லி குப்பை போடும் வீட்டின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று கூறும் புதிய சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

"நாம் பொறுப்புள்ள சமுதாயமாக திகழ்வோம் என நம்புகிறேன்," என்று பொதுச் சுகாதார மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி சில்வா கூறினார்.