சிங்கப்பூரில் புத்தகங்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமான கீனோக்கூனியா, ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் (ஜூலை 18) அதன் மூன்றாவது கிளையைத் திறந்துள்ளது. அந்தக் கிளை ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
கீனோக்கூனியா நிறுவனத்தின் உள்ளூர், வெளியூர் வர்த்தகத்தின் துணைத் தலைவர் கெய்ஜிரோ மோரி, புத்தகம் அல்லாத பொருள்களைக் கிளையில் விற்க முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டார்.
“எனினும் இந்தக் கடையைப் புத்தகம் தொடர்பானதாக வைத்திருக்க தொடர்ந்து முயல்வோம். பொருள்களை விற்பனை செய்யும் சாதாரண கடையாக இது மாறிவிடக்கூடாது,” என்றார் அவர்.
ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் மூன்றாம் மாடியில் ஏறக்குறைய 3,433 சதுர அடி பரப்பளவில் கடை அமைந்துள்ளது.
2013ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புகிஸ் ஜங்ஷன் கிளையின் அளவைப் புதிய கிளை கொண்டுள்ளது.
நீ ஆன் சிட்டியிலிருந்து சில முக்கிய புத்தக அலமாரிகள் புதிய கிளையில் பயன்படுத்தப்படுகின்றன.
தேசிய நூலக வாரியம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டு ஆய்வில் 28 விழுக்காட்டுப் பெரியவர்கள் வாரத்தில் ஒரு முறைக்கு மேல் அச்சு நூல்கள் அல்லது மின் நூல்களைப் படிப்பதாகத் தெரியவந்தது.
அவர்களில் 75 விழுக்காட்டினர் இன்னமும் அச்சு நூல்களை வாசிக்கின்றனர். ஏறக்குறைய 54 விழுக்காட்டினர் புத்தகக் கடைகளிலிருந்து அவற்றை வாங்குகின்றனர். 51 விழுக்காட்டினர் அச்சு நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் எடுக்கின்றனர்.