கத்தித் குத்துக்கு ஆளான ஒருவரை நாற்காலியால் தாக்கிய 22 வயது பிரதேவ் சஷி குமாருக்கு நீதிமன்றம் 17 மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஆபத்துமிக்க ஆயுதத்தைக் கொண்டு காயம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) ஒப்புக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று கிச்சனர் சாலையில் நடந்த இந்த மோதலின்போது, 25 வயது தினேஷ் வாசி என்பவரது இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். வழக்கின் நான்கு பிரதிவாதிகளில் பிரதேவ்வுக்கு முதலில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற மூவரில் 24 வயது முகம்மது சஜித் சலீம் கொலைக் குற்றச்சாட்டையும் 23 வயது சதீஷ் ஜேசன் பிரபாஸ், கிர்திக் ரோஷன் பிரேம் ஆனந்த் ஆகிய இருவரும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்.
இவர்கள் சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் சாம் லியோங் சாலையில் உள்ள உணவகத்துக்குச் சென்றபோது, தினேஷின் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்பகுதியில் தினேஷ் ஓட முயன்றபோது, சஜித் அவரைப் பின்தொடர்ந்து சென்று முதுகுப் பகுதியில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது கிர்திக் உணவக நாற்காலியால் தினேஷைத் தாக்கிய நிலையில், பிரதேவ்வும் மற்றொரு நாற்காலியை எடுத்து தினேஷின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலமாக இருமுறை தாக்கினார்.
தாக்குதலின்போது நிலைகுலைந்து சாய்ந்த தினேஷ், எவ்வித எதிர்த்தாக்குதலும் செய்யவில்லை என அரசாங்க வழக்கறிஞர் ஜோனத்தன் டான் தெரிவித்தார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் பிரதேவ்வைக் கைது செய்தனர். ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.


