வெர்டன் சாலை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆடவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
செப்டம்பர் 22ஆம் தேதி வெர்டுன் சாலை அருகே அதிகாலை கிட்டத்தட்ட நான்கு மணியளவில் மூண்ட சண்டையில், தினேஷ் வாசீ எனும் 25 வயது இளையரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 22 வயது முகமது சஜித் சலீம், வெள்ளிக்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு சாம் லியோங் சாலையில் நீல நிற காரில் கைவிலங்குகள், கால்கட்டுகளோடு வந்திறங்கினார்.
சாம் லியோங் சாலையருகே காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட சந்துக்குள் அவர் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சந்தின் வளைவுக்குப் பிறகும், முஸ்தபா சென்டர் அடுக்குமாடி கார் நிறுத்துமிட வெளிவழிக்கு சற்று முன்னரும் அவர் சில இடங்களில் நிறுத்தி விசாரிக்கப்பட்டார். அவர் குறிப்பிட்ட இடங்களில் காவலதிகாரிகள் குறியீடுகளை வைத்தனர். அவருக்கு உதவியாக ஒரு மொழிபெயர்ப்பாளரும் பின்தொடர்ந்தார்.
சந்துக்குள் நுழைந்ததிலிருந்து ஏறத்தாழ 25 நிமிடங்களுக்குப் பின்பு, சரிகம உணவகத்தைக் கடந்து சந்திலிருந்து வெளியேறிய சஜித், வெர்டன் சாலை கிம் சான் லெங் காப்பிக் கடைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கும் காவலதிகாரிகள் அவரை விசாரித்தனர்.
பின்பு, காப்பிக்கடையின் அருகே இருந்த சந்துக்குள் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். சந்துக்குள் சென்று திரும்பியதும் அவர் வந்திறங்கிய அதே நீல காரில் சம்பவ இடத்தைவிட்டு நண்பகல் 12.20 மணிக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவரையடுத்து, 22 வயது கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த், 20 வயது பிரதாவ் சஷிகுமார், 23 வயது சதிஷ் ஜேசன் பிரபாஸ் அதே நீல நிற காரில் ஒருவர் பின் ஒருவராக அழைத்துவரப்பட்டனர்.
சட்டத்திற்ப் புறம்பாக ஒன்றுகூடியதாகவும், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீதும் இரு 24 வயது பெண்மணிகளான நூர் டியானா ஹாருன் அல் ரஷீத், கஸ்தூரி காளிதாஸ் மாரிமுத்து மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால் 10 ஆண்டு வரையிலான சிறையும், பிரம்படியும் அவர்கள் பெறக்கூடும். பெண்கள் என்பதால் டியானாவுக்கும் கஸ்தூரிக்கும் பிரம்படி விதிக்கப்படாது.
சதிஷ் ஜேசன் பிரபாஸ் பிற்பகல் 2.35 மணிக்குக் கிளம்பியதும் காவல்துறை, தடைகளை அகற்றியது.
குற்றம் சுமத்தப்பட்ட இரு பெண்மணிகளும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
விசாரணையைக் காண சையது கஃபே, முஸ்தபா சென்டர் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம், வெர்டன் ஹவுஸ் கீழ்த்தளம், கிம் சான் லெங் காப்பிக்கடை என சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர்.
கொலைக் குற்றம் நிரூபணமானால் சஜித்துக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.