துவாஸ் வட்டாரத்தில் பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டு உருண்டுகொண்டிருந்ததாக நம்பப்படும் பூனைக்குட்டி இப்போது தத்தெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தது.
அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தவறு இழைக்கப்பட்டது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆகக் கடைசித் தகவல்களுடன் கூடிய தேசிய பூங்காக் கழக அறிக்கை குறிப்பிட்டது.
“சம்பவ இடத்துக்கு நாங்கள் நேரில் சென்று பார்த்து சம்பந்தப்பட்டோரிடம் தொடர்பில் இருக்கிறோம். சம்பவத்தையடுத்து பூனை இப்போது தத்தெடுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பூனையின் நலன் குறித்து நாங்கள் விசாரிப்போம்,” என்று தேசியப் பூங்காக் கழகத்தின் அமலாக்க, விசாரணைக் குழும இயக்குநர் ஜெசிக்கா குவோக் அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்த விவகாரம் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 9.45யிலிருந்து 10.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் துவாசில் உள்ள டெக் பார்க் கிரெசன்டில் உள்ள ஊழியர் உணவங்காடியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் இம்மாதம் 23ஆம் தேதி ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. பூனைக்குட்டியைக் கொடுமைப்படுத்தியதாக நம்பப்படும் நபரின் சக ஊழியர் சம்பவம் குறித்து சங்கத்திடம் தெரியப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட பூனைக்குட்டி பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைக்கப்பட்டு பலமுறை உருட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு செய்ததாக நம்ப்படும் ஊழியருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அங்கிருந்த மேலாளர் ஒருவர் மேல்விசாரணைக்கு ஒத்துழைக்கவோ கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளிகளைக் காண்பிக்கவோ மறுத்ததாக சங்கம் சொன்னது.

