அமெரிக்க ராணுவச் சிறையிலிருக்கும் மலேசியர் இருவரை விடுவிக்க தீவிர முயற்சி

அமெரிக்க ராணுவச் சிறையிலிருக்கும் மலேசியர் இருவரை விடுவிக்க தீவிர முயற்சி

1 mins read
9a44c4f5-d877-4463-bac8-a5a20eb7f735
இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட அவ்விரு மலேசியர்களும் குவான்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். - கோப்புப்படம்: நியூயார்க் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கியூபாவின் குவான்டனாமோ பேயில் உள்ள அமெரிக்க ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியர் இருவரை விடுவித்து, தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை மலேசிய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

அண்மையில் நியூயார்க்கிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, குவான்டனாமோ விவகாரங்களுக்கான அமெரிக்கச் சிறப்புப் பேராளர் டினா கைடனோவைத் தாம் சந்தித்ததாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் திருவாட்டி கைடனோவை அவர் சந்தித்தது இது இரண்டாவது முறை.

முன்னதாக, குவான்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நசீர் லேப், முகம்மது ஃபாரிக் அமின் என்ற இரு மலேசியர்களையும் அவர் நேரில் கண்டு, பேசி வந்தார்.

“அவர்களை மீட்டு, மலேசியாவிற்கு அழைத்துவரும் முயற்சிகளை விரைவுபடுத்துவோம்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திரு சைஃபுதீன் குறிப்பிட்டுள்ளார்.

பாலியில் 2002 அக்டோபரிலும் ஜகார்த்தாவில் 2003 ஆகஸ்ட்டிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பிருப்பதாகக் கூறி, கைதுசெய்யப்பட்ட எழுவரில் நசீரும் முகம்மது ஃபாரிக்கும் அடங்குவர்.

தாய்லாந்தில் பிடிபட்ட அவ்விருவரும் 2006ஆம் ஆண்டில் குவான்டனாமோ பே சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அவ்விரு குண்டுவெடிப்புகளிலும் மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்