சிங்கப்பூரில் ‘கேஎல்ஏ’ விரிவாக்கம்: 400 வேலைவாய்ப்புகள் உருவாகும்

சிங்கப்பூரில் ‘கேஎல்ஏ’ விரிவாக்கம்: 400 வேலைவாய்ப்புகள் உருவாகும்

படம்: கேஎல்ஏ நிறுவனம்

21 Nov 2026 - 7:15 pm

2 mins read

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கேஎல்ஏ நிறுவனம் அங் மோ கியோவில் விரிவாக்கம் கண்டுள்ளது.

புதிய தளத்தை நிறுவனம், வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) திறந்தது. அதன்மூலம் 400 வேலைகள் உருவாகும்.

புதிய 210,000 சதுர அடி தளம் 2024 அக்டோபரில் திறக்கப்பட்ட பகுதியுடன் செயல்படும். புதிய தளத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளுக்குத் தேவையான அதிநவீனப் பகுதி மின்கடத்திச் சாதனங்களை நிறுவனம் விரைவாக உற்பத்தி செய்யும்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

“தனித்துவ ஆற்றல்களைச் சிங்கப்பூர் வளர்ப்பதுடன் இத்தகைய நிறுவனங்களுடன் செயல்படுவது வளர்ச்சிக்கும் வாய்ப்புகளுக்கும் உதவும்,” என்றார் திரு கான்.

நிறுவனத்தின் விரிவாக்கம் இயந்திர வடிவமைப்பு, பொருள்களின் மதிப்பீடு, தயாரிப்புச் சோதனைப் பிரிவுகளில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான திரு கான்.

“கேஎல்ஏ நிறுவனத்தின் மிகப்பெரிய வேலை இடத் தளமாக சிங்கப்பூர் மாறியுள்ளது. மொத்தம் 420,000 சதுர அடியாக அது விரிவாக்கம் கண்டுள்ளது,” எனத் தலைமை நிதி அதிகாரி பிரென் ஹிகின்ஸ் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கேஎல்ஏ நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

தற்போதைய, எதிர்கால விரிவாக்கங்கள் ஆராய்ச்சி மேம்பாடு, விநியோகத் தொடர், தயாரிப்புப் பொறியியல் பிரிவுகளில் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பகுதி மின்கடத்தித் துறை சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஆறு விழுக்காட்டிற்குப் பங்காற்றுகிறது. அத்துறையில் 35,000 பேருக்கு மேல் பணிபுரிகின்றனர் எனப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறந்த திறனாளர்கள், ஆதரவான அரசு, பகுதி மின்கடத்தித் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு ஆகியவை சிங்கப்பூருக்கு பெரும் பலமாக இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்