சாங்கி விமான நிலையத்தில் கத்தியைத் தனது காலுறைக்குள் மறைத்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது ஆடவர்மீது, பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு சென்றதாக ஆகஸ்ட் 29ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி பிற்பகல் 12.45 மணியளவில் விமான நிலைய முனையம் 4ல் புறப்பாடுகளுக்கான வளாகத்தில் நடந்த சோதனைகளின்போது இந்தோனீசியரான சைஃபுதின் அல்ஃபித்ரோ, தனது காலுறையில் 19.5 சென்டிமீட்டர் நீளக் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கத்தி பல அடுக்கு நெகிழிப் பைகளாலும் ஒட்டுநாடாவினாலும் சுற்றப்பட்டிருந்தது.
அது, ஊடுகதிர் இயந்திரம் மூலம் கண்டறியப்பட்டதாக ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சைஃபுதினை சோதனை அறைக்குள் அழைத்துச்சென்றபோது அங்கு அவரது வலது காலணிக்குள் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொது இடங்களுக்கு ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு சொல்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
தற்போது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சைஃபுதின் தொடர்புடைய வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.


