கோஃபு நிறுவனத்துக்குச் சொந்தமான உணவு நிலையங்களில் சோறு, காய்கறி வகைகள், இறைச்சி வகைகள் போன்ற சமைத்த உணவு வகைகளை விற்கும் கடைகளில் இனி ஒவ்வோர் உணவு வகையின் விலையும் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள ஏதுவாக இறைச்சி, கடலுணவு, காய்கறி, அதிக விலை விற்கும் உணவு வகை (பிரீமியம்) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நிறங்களை அடிப்படையாகக் கொண்ட விலை முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, கோஃபு உணவு நிலையத்தில் கடலுணவு உணவுவகைகளுக்கு நீல நிற முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
அவற்றின் விலை $2.50.
பிரிமீயம் உணவுவகைகளுக்கு வெள்ளி நிற முத்திரை பயன்படுத்தப்படும்.
அவற்றின் விலை கைப்பட எழுதப்பட்டிருக்கும்.
தனித்தனி உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் உள்ள 77 கோஃபு உணவு நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் உள்ள சமைத்த உணவுக் கடைகள் அனைத்திலும் இந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் பிளான்டேஷன் பிளாசாவில் உள்ள கோஃபு உணவு நிலையத்தில் இருக்கும் ஹோங் ல உணவுக்கடையில் திங்கட்கிழமை (மார்ச் 24) அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டத்தை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங்கும் கோஃபு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சுவா ஷே லின்னும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
அறிமுக நிகழ்வில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்கும் கலந்துகொண்டார்.
விலை வெளிப்படைத்தன்மையைப் புதிய அணுகுமுறை மேம்படுத்தும் என்றும் வழக்கமாக வாங்கும் உணவு வகைகளை வாங்கும்போது விலை மாற்றம் இல்லை என்பதை அது உறுதிசெய்யும் என்றும் சங்கம் தெரிவித்தது.
சமைத்த உணவு வகைகளை விற்கும் கடைகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலை சொல்வதாக சிஎன்ஏ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஒவ்வோர் உணவு வகைக்கும் விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் இணையம் வாயிலாக அழைப்பு விடுத்தனர்.
புதிய அணுகுமுறை வாடிக்கையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் என்றார் திரு யோங்.
சங்கத்துடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திய கோஃபு நிறுவனத்துக்கு திரு யோங் நன்றி தெரிவித்தார்.
சமைத்த உணவு வகைகளை விற்கும் மற்ற கடைகளும் ஒவ்வோர் உணவு வகையின் விலையைக் காட்சிப்படுத்தும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க இந்த அறிமுகத் திட்டம் அடித்தளமாக அமைய வேண்டும் என்று திரு யோங் விருப்பம் தெரிவித்தார்.

