கோ போ கூன் அரசுப் பதவியிலிருந்து விலகுகிறார்

கோ போ கூன் அரசுப் பதவியிலிருந்து விலகுகிறார்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 May 2026 - 6:15 pm

2 mins read

மனிதவள, சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், குடும்பக் காரணங்களுக்காக அரசுப் பதவியிலிருந்து விலகக் கோரியுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று (மே 22) தெரிவித்தது.

அவரது பதவி விலகலைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏற்றுக்கொண்டதாகவும், அது ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.

இருப்பினும், தெம்பனிஸ் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார்.

வெள்ளிக்கிழமையன்று (மே 22) ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் கோ, அரசியல் பதவியிலிருந்து விலகும் முடிவு, “என் குடும்பத்தினருடன் நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பிறகே, கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

“2015 முதல் ஓர் அரசியல் பதவியில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாகும். பல்வேறு அமைச்சுகள், தொழிலாளர் இயக்கத்தில் சிங்கப்பூருக்குப் பங்களிக்கவும், ஓர் ஆற்றல்மிக்க குழுவின் அங்கமாக மாற்றத்தை ஏற்படுத்தவும் கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

அரசியல் பதவியில் பத்தாண்டு காலம் பணியாற்றியதற்காகவும், வர்த்தக தொழில், மனிதவளம், சுகாதாரம், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறம், தேசிய வளர்ச்சி மற்றும் தொழிலாளர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் டாக்டர் கோவிற்கு பிரதமர் வோங் நன்றி தெரிவிப்பதாக அறிக்கை மேலும் கூறியது.

“அரசாங்கத்தில் பணியாற்றிய ஆண்டுகள் முழுவதும், டாக்டர் கோ அர்ப்பணிப்பு, சிந்தனை, ஆழ்ந்த கடமையுணர்வுடன் பணியாற்றினார். அவரது பங்களிப்புகள் பல சிங்கப்பூரர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோ, 2013ஆம் ஆண்டு பொங்கோல் ஈஸ்ட் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது முதன்முதலில் அரசியல் களத்தில் நுழைந்தார்.

அப்போதைய நாடாளுமன்ற நாயகர் மைக்கல் பாமர், ஒரு தனிப்பட்ட ஒழுக்கக்கேடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் நடைபெற்றது.

நான்கு முனைப் போட்டியில், அவர் பாட்டாளிக் கட்சியின் லீ லி லியானிடம் தோல்வியடைந்தார். அவர் 43.73 விழுக்காட்டு வாக்குகளையும், லீ லி லியான் 54.50 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றனர். பின்னர் 2015 பொதுத் தேர்தலில் அங் மோ கியோ குழுத் தொகுதி அணியில் இடம்பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அரசியல் பதவியில் நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
நீடித்த நிலைத்தன்மைபொங்கோல்சுகாதாரம்ஃபேஸ்புக்தொழிலாளர்