சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் குர்பான் சடங்குக்கான பதிவு தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 10) முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை இதற்குப் பதிவு செய்துகொள்ளலாம்.
நன்கொடையாக வழங்கப்படும் ஆட்டிறைச்சியின் ஒரு பகுதி காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குர்பான் சடங்கின்கீழ் ஆடு போன்ற கால்நடைகளின் இறைச்சியை இறையாளர்களுக்கும் வசதி குறைந்தோருக்கும் விநியோகிப்பது வழக்கம்.
சிங்கப்பூரிலுள்ள ஏறத்தாழ 52 பள்ளிவாசல்கள் வெளிநாடுகளில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளன என்று சலாம்எஸ்ஜி குர்பான் உதவிக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு, பொட்டலமிடப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சிங்கப்பூரில் குர்பான் சடங்குக்காக ஆறு பள்ளிவாசல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதுகுறித்த மேல்விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குர்பான் சடங்கிற்கான முதிர்ந்த ஆட்டின் விலை $360, இளம் ஆட்டின் விலை $365, மாட்டிறைச்சியின் ஏழில் ஒரு பகுதிக்கான விலை $365, ஒரு மாட்டின் இறைச்சி விலை $2,555 என்று தெரிவிக்கப்பட்டது.
குர்பான் சடங்கில் பங்கேற்க விரும்புவோர் www.ourmasjid.sg/korban என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு நேரடியாகச் செல்லலாம்.