கேபோட்ஸ் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.
லிங்க்ட்இன், கரியர்ஸ்@கவ் (Careers@Gov) இவ்விரு தளங்களில் முழுநேர அதிகாரிகளுக்கும் மூத்த அதிகாரிகளுக்குமான வேலைவாய்ப்பு குறித்து ஆணையம் விளம்பரப்படுத்தியுள்ளது.
வேலையில் சேருவோர், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் சவால்மிக்க அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவில் அங்கம் வகிப்பர்.
கேபோட் கருவிகளைப் பயன்படுத்துவோரை அவர்கள் கைதுசெய்யவேண்டும். அவற்றை இறக்குமதி செய்வோர், கடத்துவோர் தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும். இன்டர்போல் போன்ற அனைத்துலகக் காவல்துறை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவேண்டும்.
இளையர்கள், சம்பந்தப்பட்ட தரப்புகள், அமைப்புகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் விசாரணை அதிகாரிகள் நடத்தவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) ஆணையம் வெளியிட்ட விளம்பரம் குறிப்பிட்டது.
லிங்க்ட்இன் வழியாக 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
விசாரணை அதிகாரி வேலைக்கு இம்மாதம் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆணையத்தின் விளம்பரத்தில் சம்பளம் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
கேபோட் பயன்பாட்டை முறியடிக்க சுகாதார அமைச்சு, உள்துறை அமைச்சிடம் உதவும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து விசாரணை அதிகாரிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹாங்காங்குடன் கைகோக்கும் சிங்கப்பூர்
இதற்கிடையே, மின்சிகரெட் பயன்பாட்டைக் களைய ஹாங்காங் சுகாதாரத் துறையுடன் சுகாதார அறிவியல் ஆணையம் கைகோத்துள்ளது. அந்த இரண்டு அமைப்புகளும் தகவல்களையும் நிபுணத்துவக் கருத்துகளையும் பரிமாறிக்கொள்கின்றன.
புதன்கிழமை (ஆகஸ்ட் 13) சுகாதார அறிவியல் ஆணையம், ஹாங்காங் சுகாதாரத் துறையுடன் சுகாதாரப் பொருள்கள் அடங்கிய சுகாதாரத் துறை விவகாரங்கள் தொடர்பில் இணக்குக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டதாய் சொன்னது.
சிங்கப்பூரும் ஹாங்காங்கும் மின்சிகரெட்டைக் களையும் முயற்சியில் இறங்கியுள்ளன.

