கிராஞ்சி விரைவுச்சாலையில் சனிக்கிழமை (மே 23) இரவு நிகழ்ந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டியும் அவருடன் பின் இருக்கையில் பயணம் செய்தவரும் காயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 65 வயதான மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அவருடன் பயணம் செய்த 62 வயது மாது சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையை அடைந்தார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவர்களுடன் விபத்தில் சிக்கிய வாகனத்தின் 67 வயது ஓட்டுநர் கவனம் இன்றி வாகனம் ஓட்டிக் கடுமையான காயம் விளைவித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார்.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்த விபத்து குறித்து அன்றையதினம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார். விபத்து குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் பகிர்ந்த காணொளியில் குற்றவியல் பிரிவின் வாகனம் சம்பவ இடத்தில் சாலையின் வலது கோடியில் காணப்பட்டது.
இரண்டு காவல்துறை வாகனங்கள், இழுவை வண்டி, நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியின் மோட்டார்சைக்கிள் ஆகியன ஒரு காவல்துறை வாகனத்துக்கு முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
சாய்ந்த நிலையில் ஒரு மோட்டார்சைக்கிள் ஒரு காருக்குப் பின்னால் கிடந்தது. அவற்றைச் சுற்றியும் அவற்றின் மேலும் காவல்துறையின் விசாரணைக் குறியீடுக்கான சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

