கிராஞ்சியில் உள்ள முன்னைய சிங்கப்பூர் குதிரைப் பந்தய வளாகத்தில் வரவிருக்கும் குடியிருப்புத் திட்டத்திற்கான விரிவான திட்டங்களை வகுப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு 2026ல் அழைப்பு விடுக்கப்படும்.
அடுத்த பத்தாண்டுகளில் திட்டங்கள் வடிவம் பெற்று, பெருந்திட்டம் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு ஆலோசனை நடவடிக்கை மூலம் உருவாக்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) திங்கட்கிழமை (டிசம்பர் 1) அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட 2025 பெருந்திட்டத்தில் குறிப்பிட்டிருந்தது.
சட்டபூர்வமாக பிணைக்கப்பட்டுள்ள இந்தப் பெருந்திட்டம், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் வளர்ச்சியை வழிநடத்துகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் கிராஞ்சி குதிரைப்பந்தய வளாகத்துக்கான யோசனைகள் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள், இயற்கை ஆர்வலர் குழுக்கள், நிபுணத்துவ அமைப்புகள், கல்வியாளர்கள் ஆகியோருடன் பேசி அரசாங்க அமைப்புகள் கருத்து திரட்டியதாக யுஆர்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஒரு தள வருகை மற்றும் குழுக் கலந்துரையாடல் மூலம் பங்கேற்பாளர்கள், கிராஞ்சியின் நினைவுகள், பழமையான தன்மை, கிராஞ்சி இயற்கை பசுமைப் பாதைக்கு அருஅருகில் உள்ள தன்மையைப் பயன்படுத்தி ஓர் உள்ளடக்கிய, கவர்ச்சிகரமான குடியிருப்புப் பேட்டையைத் திட்டமிடுவதற்கான வழிகள் பற்றி விவாதித்தனர்,” என்று யுஆர்ஏ விவரித்தது.
கிராஞ்சி குதிரைப்பந்தய வளாகத்தில் கடைசியாக 2024 அக்டோபரில் குதிரைப் பந்தயம் நடைபெற்றது.
ஜூன் 25 முதல் நவம்பர் 29 வரை, யுஆர்ஏ கட்டடத்தில் நடைபெற்ற வரைவு பெருந்திட்டம் 2025 கண்காட்சி, சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. கண்காட்சியைப் பார்வையிட்டவர்கள் அக்கம்பக்கத்தில் நல்ல போக்குவரத்து இணைப்பு, பசுமை மற்றும் நீர்வள இடங்கள், குடும்பங்களுக்கான வெளிப்புற இயற்கை சார்ந்த இடங்கள் இருக்க வேண்டும் என்று கூறியதாக யுஆர்ஏ மேலும் கூறியது.
இந்தக் கருத்துகள், பெருந்திட்டம் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு கட்டத்தின்போது பரிசீலிக்கப்படும் என்றும் யுஆர்ஏ தெரிவித்தது. கண்காட்சியைச் சுமார் 250,000 பேர் பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில், மற்றொரு குதிரைப் பந்தய மைதானம் குடியிருப்புக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
அந்தக் குடியிருப்புப் பேட்டையில் திட்டமிடப்பட்ட வசதிகளில் சில்லறை விற்பனை, உணவு மற்றும் பானத் தெரிவுகள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு, சமூக வசதிகள், பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், பேருந்து சந்திப்பு நிலையம் ஆகியவை அடங்கும்.
இந்த வசதிகளில் சில அங்குள்ள 22 மரபுடைமைக் கட்டடங்களில் உள்ளடக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
எதிர்காலத்திற்கான நமது ஒன்றுபட்ட விருப்பங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பெருந்திட்டத்தை அரசு அமைப்புகளின் பொது ஈடுபாட்டு முயற்சிகள் உதவியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
“திட்டமிடலில் இருந்து செயல்படுத்தப்படுதலுக்கு நாம் நகரும்போது, இந்தத் திட்டங்களை உயிர்ப்பிக்கவும், நெகிழ்ச்சித்தன்மை கொண்ட, உள்ளடக்கிய, வாய்ப்புகள் நிறைந்த சிங்கப்பூரை உருவாக்கவும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம்,” என்றும் அவர் கூறினார்.

