சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் தொகுதி குறித்து உரிய நேரத்தில் தெரியவரும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் என்ன முடிவெடுக்கிறார் என்பதும் தெரியவரும் என்று செய்தியாளர்களிடம் திரு இங் கூறினார்.
தாம் களமிறங்கப்போவது அங் மோ கியோ குழுத்தொகுதியிலா அல்லது புதிய ஜாலான் காயு தனித்தொகுதியிலா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்
திரு இங், ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புக்கிட் பாத்தோக், அங் மோ கியோ, செங்காங் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாலான் காயு தனிதொகுதியின் ஒரு பகுதியான ஃபெர்ன்வேல் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த குடும்பக் கேளிக்கை நிகழ்ச்சிக்கு (மார்ச் 16) திரு இங் வந்திருந்தார்.
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நவம்பருக்குள் நடைபெற்றாகவேண்டும். அது இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
திரு இங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உள்ளிட்ட மற்ற மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுடன் ஃபெர்ன்வேல் சென்றார்.
2015ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த திரு இங், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் ஐந்து உறுப்பினர் கொண்ட மக்கள் செயல் கட்சியின் அணியில் களமிறங்கி வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
2016ஆம் ஆண்டு அவர் பள்ளிக்கல்வி அமைச்சராகவும் போக்குவரத்து இரண்டாம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்
பின்னர், 2018ஆம் ஆண்டில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளராக அவர் பொறுப்பேற்றார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத் தொகுதியில் திரு இங் உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் செயல் கட்சி அணி தோல்வியுற்றது.

