அனைத்துலக அளவில் காற்பந்துப் போட்டிகளும் குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வுகளும் பிரபலமாக இருந்தாலும் சிங்கப்பூரில் பாடகி டெய்லர் சுவிஃப்ட், கொரிய நாடக விரும்பிகளிடையே பெருவரவேற்பைப் பெற்றுள்ள குறும்புக் கதாபாத்திரமான ‘லபுபு’ பொம்மை ஆகியவை குறித்து கூகல் தளத்தில் இவ்வாண்டு அதிகம் தேடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தவிர புதிய அதிபர் பதவியேற்பு, போப் ஃபிரான்சிஸ் வருகை என இவ்வாண்டு சிங்கப்பூரில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சிங்கப்பூரர்கள் கூகல் இணையத்தளத்தில் தேடியுள்ளதாகவும் தெரிகிறது.
‘கூகல்’ நிறுவனம் அனைத்துலக அளவில் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்த ஆண்டறிக்கையைக் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், அதிகம் தேடப்பட்ட உள்ளூர்ச் செய்திகள், அனைத்துலகச் செய்திகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உள்ளூர், அனைத்துலகப் பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்த பட்டியல் இடம்பெற்றுள்ளது.
பொதுவான செய்திகளில் அமெரிக்க அதிபர் தேர்தல், ஒலிம்பிக் 2024, யூரோ 2024 காற்பந்துப் போட்டி உள்ளிட்டவை குறித்து சிங்கப்பூரர்கள் அதிகம் தேடியுள்ளனர். உள்ளூர்ச் செய்திகளில் சிடிசி பற்றுச்சீட்டுகள், அதிக வெப்ப அலை, ஐபோன் 16 உள்ளிட்டவை குறித்து அதிகம் தேடியுள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
ஆங்கில, கொரிய திரைப்படங்கள், பொம்மை அசைவுப்படங்கள் சிலவற்றைக் குறித்தும் சிங்கப்பூரில் அதிகம் தேடப்பட்டுள்ளது அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
அனைத்துலகப் பிரபலங்களில் அமெரிக்க அதிபராகியுள்ள டோனல்ட் டிரம்ப், கேட் மிடில்டன், போப் ஃபிரான்சிஸ், கமலா ஹாரிஸ் உள்ளிட்டவர்கள் குறித்தும் சிங்கப்பூர் பிரபலங்களில் திடல்தட வீரர் மேக்ஸ் மேடர், பிரதமர் லாரன்ஸ் வோங், உள்ளூர் நடிகையும் தொகுப்பாளருமான ஃபதின் அமிரா, மறைந்த பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் உள்ளிட்டோர் குறித்தும் சிங்கப்பூரர்கள் அதிகம் தேடியுள்ளனர்.
அனைத்துலக அளவிலும் காற்பந்து, அமெரிக்க தேர்தல், ஒலிம்பிக் உள்ளிட்டவை அதிகம் தேடப்பட்டது குறிப்பிடத்தக்கது.