அமெரிக்கக் கணினிச் சில்லு நிறுவனமான லாம் ரிசர்ச், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 200 புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கவிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பணிகளைக் கையாளக்கூடிய சில்லுகளை உருவாக்க உதவும் நவீனத் தொழில்நுட்பங்களில் புதிய வேலைகள் கவனம் செலுத்தும்.
கலிபோர்னியாவின் ஃபிரிமான்ட்டைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், சில்லுகளைத் தயாரிக்கும் வாடிக்கையாளர்களுக்காக இங்குச் சேவை நிலையமொன்றை நடத்திவருகிறது. புதிய வேலைகளில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு சிறப்புப் பொறியியல், தொழில்நுட்பப் பணிகளாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது.
புதிய வேலைகளில் பெரும்பாலானவை உள்ளூர்வாசிகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.
“பொறியியல் துறையில் ஆழமான திறன் பெற்றவர்களுக்குரிய தேவை இதற்கு முன்பு இந்த அளவிற்கு இருந்ததில்லை,” என்று லாமின் தென்கிழக்காசியாவிற்கான நிறுவனத் துணைத் தலைவரும் பொது மேலாளருமான திரு ஆண்ட்ரூ கோ கூறினார்.
“உள்ளூர்த் தடத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை சில்லுத் தயாரிப்புப் பணிகளை வழிநடத்துவோர் மீது நாங்கள் முதலீடு செய்கிறோம். அதே வேளையில் பகுதிமின்கடத்திப் புத்தாக்கத்தில் சிங்கப்பூரின் தலைமைத்துவத்தை நிலைநிறுத்துவதற்குச் சிறந்த திறன்களையும் வலுப்படுத்துகிறோம்,” என்றார் அவர்.
ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது லாமின் உள்ளூர்த் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இந்த வட்டாரம் முழுதும் பகுதிமின்கடத்தித் தொழில்நுட்பத் துறையில் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொள்ள வாடிக்கையாளர்களுக்கும் பங்காளிகளுக்கும் இடையில் அணுக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அது உதவும் என்றும் நம்பப்படுகிறது.
லாம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இயங்கிவருகிறது. இந்தக் காலத்தில் அது இங்கு அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன் உள்ளூர் மாணவர்களுக்கு உத்தேச வாழ்க்கைத்தொழில் பாதைகளை அறிமுகப்படுத்தவும் பகுதிமின்கடத்தித் துறை குறித்த நடைமுறை நுண்ணறிவுகளை அவர்கள் பெறவும் உதவுவதில் நிறுவனம் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சிகளை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் அது இணைந்து செயல்படுத்துகிறது.
பொருளியல் வளர்ச்சிக் கழகத் தரவுகளின்படி, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதிமின்கடத்தித் துறையின் பங்கு கிட்டத்தட்ட 6 விழுக்காடு. இந்தத் துறையில் 35,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.


