4,745 புதிய தனியார் வீடுகளுக்கு நிலம் ஒதுக்கீடு

4,745 புதிய தனியார் வீடுகளுக்கு நிலம் ஒதுக்கீடு

2 mins read
697c5fb1-c280-4e0c-8d28-90fb0f4bc8b1
இவ்வாண்டு முற்பாதியில் ஏற்கெனவே நிலத்தொகுதி வெளியிடப்பட்டது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் 4,745 புதிய தனியார் வீடுகளுக்கான நிலப்பகுதியை இவ்வாண்டு பிற்பாதியில் அரசாங்கம் ஒதுக்கவிருக்கிறது.

ஏற்கெனவே இவ்வாண்டு முற்பாதியில் புதிய தனியார் வீடுகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து மொத்தம் 9,320 புதிய தனியார் வீடுகளுக்கு இவ்வாண்டு நிலம் ஒதுக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை, புதிய தனியார் வீடுகளுக்காகக் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாகப் பதிவானதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.

அதனைத் தொடர்ந்து எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உட்பட வெளியிடப்படும் புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 61,000 ஆகும். அவற்றில் அடுத்த ஈராண்டுகளில் விற்பனைக்கு விடப்படும் கிட்டத்தட்ட 32,000 வீடுகளும் அடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் புதன்கிழமை (ஜூன் 3) ஃபேஸ்புக்கில் கூறியதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.

உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் எட்டுத் தனியார் வீடமைப்புத் திட்டங்களும் ‘வைட் சைட்’ எனப்படும் ஒதுக்கப்பட்டுள்ள இடமும் அடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு செய்தி அறிக்கை மூலம் தெரிவித்தது. அவற்றின்கீழ் 83,350 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட வர்த்தகப் பகுதியும் புதிய தனியார் வீடுகள், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றுக்கான பகுதியும் அடங்கும்.

காத்திருப்புப் பட்டியலில் எட்டுத் தனியார் வீடமைப்புத் திட்டங்கள், வர்த்தகப் பகுதிக்கான ஓரிடம், ஹோட்டல் திட்டங்களுக்கான இரண்டு இடங்கள் ஆகியவை அடங்கும். அவை ஒப்பந்தப்புளிகளுக்கு விடப்பட்டால் மேலும் 4,455 தனியார் வீடுகள், 104,750 சதுரமீட்டர் பரப்பளவிலான வர்த்தகப் பகுதி, 970 ஹோட்டல் அறைகள் ஆகியவற்றை அமைக்க இடம் இருக்கும்.

காத்திருப்புப் பட்டியலில் இடம்பெறும் இடங்கள் உடனடியாக ஒப்பந்தப்புள்ளிக்கு விடப்படமாட்டா. சொத்து மேம்பாட்டாளர் குறைந்தபட்ச விலையைக் குறிப்பிட்டு அது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட இடம் ஒப்பந்தப்புள்ளிக்கு விடப்படும்.

குறிப்புச் சொற்கள்