அரசாங்க நில விற்பனைக்கான உறுதி செய்யப்பட்ட பட்டியலில் தனியார் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகள் அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தொடர்ச்சியாகக் குறைந்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகள் (ரிசர்வ்) பட்டியலில் உள்ள நிலப்பகுதிகள் அதிகரிக்கும்.
உறுதி செய்யப்பட்ட பட்டியலில் தனியார் வீடமைப்புக்காக எட்டு நிலப்பகுதிகளும் வர்த்தகம் மற்றும் குடியிருப்புக்காக ஒரு நிலப்பகுதியும் அடங்கும்.
இந்த நிலப்பகுதிகளில் 4,575 தனியார் வீடுகளைக் கட்ட முடியும். இவற்றில் 635 கூட்டுரிமை வீடுகளும் அடங்கும்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் 4,725 வீடுகளைக் கட்டக்கூடிய நிலப்பகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு முற்பாதியில் வர்த்தகப் பகுதிகளுக்காக 22,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலப்பகுதி ஒதுக்கப்படும். தனியார் வீடமைப்புக்காக ஒதுக்கப்படும் நிலப்பகுதியைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் குறைத்துள்ளது.
தனியார் வீடுகளுக்கான தேவை சீராக இருக்கும்போதிலும் பொருளியல் நிலையற்றத்தன்மை காரணமாக நிலப்பகுதிகளை ஏலத்தில் எடுக்க சொத்து மேம்பாட்டாளர்கள் தயங்குவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, ரிசர்வ் பட்டியலில் உள்ள தனியார் வீடுகளுக்கான உத்தேச எண்ணிக்கை 4,610ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் பிற்பாதியில் இந்த எண்ணிக்கை 4,475 ஆகப் பதிவானது. இத்தகவலை தேசிய வளர்ச்சி அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ரிசர்வ் பட்டியலில் ஆறு தனியார் குடியிருப்புகளுக்கான நிலப்பகுதிகளும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான ஒரு நிலப்பகுதியும் மூன்று ‘வெள்ளை’ பகுதிகளும் உள்ளன.
‘வெள்ளை’ பகுதி என்பது குடியிருப்பு, வர்த்தகம், ஹோட்டல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படக்கூடியவை.
ரிசர்வ் பட்டியலில் ஹோட்டல் கட்டுவதற்காக இரண்டு நிலப்பகுதிகளும் இடம்பெறுகின்றன.
ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச ஏலத்தொகையைச் சொத்து மேம்பாட்டாளர் முன்வைத்தால் அல்லது சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் போதுமான ஆர்வம் நிலவினால் மட்டுமே ரிசர்வ் பட்டியலில் உள்ள நிலப்பகுதிகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன.

