இந்தோனீசியாவின் வடகலிமந்தானில் அமைந்துள்ள தனது துணை நிறுவனத்தின் நிலப் பகுதியில் காட்டுத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘கெஞ்சானா அக்ரி’ எனப்படும் செம்பனை எண்ணெய் உற்பத்தி நிறுவனத்திடம் இந்தோனீசிய அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நிலப் பகுதி, கெஞ்சானா அக்ரி குழுமத்தின் நிலத்துக்கும் அதற்கு அருகிலுள்ள மூன்றாம் தரப்பு நிலத்துக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் தீவைத்து நிலத்தைச் சீர்திருத்தியதாகச் சந்தேகிக்கப்படுவதன் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதியில் தனது துணை நிறுவனம் எவ்வித நிலச் சீர்திருத்தத்திலோ நில ஆயத்தப் பணிகளிலோ ஈடுபடவில்லை என்று கெஞ்சானா அக்ரி பங்குச் சந்தை ஆவணத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
துரிதமாகச் செயல்பட்ட துணை நிறுவனங்களின் தீயணைப்புக் குழுவினர், உரிய அதிகாரிகளுடனும் உள்ளூர்ச் சமூகத்தினருடனும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதாக கெஞ்சனா அக்ரி கூறியது. தீப்பிடித்த இடங்களைக் கண்டறிய ஆளில்லா வானூர்திகளும் தீக் கண்காணிப்புக் கோபுரங்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தீச்சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
செப்டம்பர் மாதத்தில் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு நடத்தினர். விசாரணைக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்கி, அதிகாரிகளுக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
சுமத்ரா, கலிமந்தான், சுலாவீசி ஆகிய பகுதிகளில் மொத்தம் ஏறத்தாழ 67,862 ஹெக்டர் பரப்பளவில் கெஞ்சானா அக்ரியின் பயிர்த்தோட்டங்களும் ஆலைகளும் அமைந்துள்ளன. வட மற்றும் கிழக்கு கலிமந்தானில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் கிட்டத்தட்ட 62 ஹெக்டர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் மொத்தப் பயிர்த்தோட்டப் பரப்பளவில் 0.09 விழுக்காட்டுக்கும் குறைவானதாகும்.
