சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிலச் சொத்துகளுக்கான நில மேம்பாட்டுக் கட்டணத்தை (LBC) அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
எனினும் ஹோட்டல், மருத்துவமனை, தாதிமை இல்லங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
நில மேம்பாட்டுக் கட்டணம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அறிக்கை வெளியிடப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிய கட்டணங்கள் நடப்பில் இருக்கும்.
வீடமைப்பு, வர்த்தகம், தொழில்துறை, வழிபாட்டுத் தலங்கள், சமூக அமைப்பு ஆகிவற்றின் கட்டடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நிலத்தின் பயன்பாட்டை மேம்படுத்தும்போதோ அதில் பெரிய கட்டுமானங்களை மேற்கொள்ளும்போதோ சொத்து மேம்பாட்டாளர்கள் இந்த நில மேம்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்துவார்கள்.
வட்டார அடிப்படையில் இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மொத்தம் 118 பிரிவுகளாக இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
தரைவீடு அல்லாத குடியிருப்புச் சொத்துகளின் நில மேம்பாட்டுக் கட்டணம் சராசரியாக 4.1 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தரைவீடு உள்ள குடியிருப்புச் சொத்துகளின் நில மேம்பாட்டுக் கட்டணம் சராசரியாக 4 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொழில்துறை இடங்களுக்கான கட்டணம் சராசரியாக 3.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வர்த்தக இடங்களுக்கான கட்டணம் சராசரியாக 0.5 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், சமூக அமைப்புகளின் கட்டடங்கள் உள்ள இடங்களுக்கான கட்டணம் சராசரியாக 3 விழுக்காடு கூடியுள்ளது.

