சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.
இது குறித்து பார்த்திபன் என்பவர் 2011ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்காக கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் தன்னால் முன்னிலையாக முடியவில்லை என்று மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இதையடுத்து மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் கண்டிப்பாக முன்னிலையாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை (மே 6) விசாரணைக்கு வந்தது.
அந்த சமயத்திலும் மா.சுப்பிரமணியனும் அவரது மனைவி காஞ்சனாவும் முன்னிலையாகவில்லை. இதையடுத்து 23ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, இருவரும் முன்னிலையாக வேண்டும் என்றும் வரத் தவறினால் அவர்கள் இல்லாமலேயே வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார்.

